மகனை இழந்த பாரதிராஜாவுக்கு பாடல் பாடி ஆறுதல் கூறிய கங்கை அமரன்
- பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
- சிறு பொன்மணி அசையும் என்ற பாடலை பாடினார்.
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் கடந்த 25-ந் தேதி மாரடைப்பால் காலமானார். 48 வயதில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மறைவு பாரதிராஜாவை நிலை குலைய செய்துள்ளது. மிகுந்த சோகத்தில் இருக்கும் பாரதிராஜாவை திரை உலக பிரபலங்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பாரதிராஜாவை இசையமைப்பாளர் கங்கை அமரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார். பாரதிராஜாவை சந்தித்த கங்கை அமரன் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவர் எழுதிய சிறு பொன்மணி அசையும் என்ற பாடலை பாடினார்.
தொடர்ந்து பாரதிராஜாவிடம் கங்கை அமரன் இதெல்லாம் நியாபகம் இருக்கா இந்த பாட்டை 10 நிமிடங்களில் எழுதினேன். பாம்குரோவ் ஓட்டலில் இருக்கும் போது பாட்டை எழுதி கொண்டு வா என்று சொன்னீர்கள்.
நானும் வெளியில் போய்விட்டு 10 நிமிடத்தில் எழுதி கொண்டு வந்தேன். பாடலை பார்த்து விட்டு, "நீ நல்லா எழுதியிருக்கடா" என பாராட்டினீர்கள். நான் ரொம்ப லக்கிமேன். இதுபோல் எத்தனை பேரை உருவாக்கி இருக்கீங்க என கூறினார்.
பழைய நினைவுகளோடு பாடலை பாடி பாரதிராஜாவுக்கு கங்கை அமரன் ஆறுதல் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.