சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன்

null

'பொன்னியின் செல்வன்' நாவலை படிக்காமல் தொடர்ந்த வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Published On 2023-03-30 12:35 GMT   |   Update On 2023-03-30 12:35 GMT
  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
  • வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக இயக்குனர் மணிரத்னம் மீது மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக இயக்கினார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வசூல் சாதனை படைத்தது.


பொன்னியின் செல்வன்

இதைத்தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீது சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றின் அடிப்படையில் படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.


மணிரத்னம்

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என்று மனுதாரரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இல்லை என்று தெரிவித்ததையடுத்து நாவலை படிக்காமல் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் என்றும் பொன்னியின் செல்வன் படமே நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதே தவிர வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது அல்ல என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Tags:    

Similar News