மேட்டுப்பாளையம் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
- நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு.
- இவர் மேட்டுப்பாளையத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் வெள்ளி, செவ்வாய், அமாவாசை மற்றும் முக்கிய விழா நாட்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். வனபத்ர காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா நடப்பது வழக்கம்.
தற்போது வனபத்ர காளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், வழிபாடு நடக்கிறது. இதனால் தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் திரைப்பட நகைச்சுவை நடிகரும், குணச்சித்திர நடிகருமான யோகிபாபு நேற்று மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு வந்தார். அவர் கோவிலுக்குள் சென்று வனபத்ர காளியம்மனை மனமுருகி வழிபட்டார். தொடர்ந்து கோவிலை சுற்றி வந்தும் சாமி தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் யோகிபாபு கோவில் வளாகத்தில் உள்ள புத்தக நிலையத்திற்கு சென்றார். அங்கு புத்தகங்களை பார்வையிட்ட யோகிபாபு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆன்மீக புத்தகங்களை வாங்கி சென்றார்.
இதற்கிடையே நடிகர் யோகிபாபு கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அங்கு வந்திருந்த மக்கள் திரண்டு வந்து, அவரை பார்த்து, அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.