சினிமா செய்திகள்

தனி நீதிபதி உத்தரவுக்கு தடை - 'ஜன நாயகன்' விவகாரத்தில் தலைமை நீதிபதி அமர்வு கூறியது என்ன?

Published On 2026-01-09 18:10 IST   |   Update On 2026-01-09 18:10:00 IST
  • சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம்
  • உத்தரவின்படி வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.

'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்திற்கு விரைந்து யுஏ தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீடு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் மதியம் 3.30 மணிக்கு தலைமை நீதிபதி தலைமையில் தொடங்கியது. அப்போது, 'இன்றைய தினமே மேல் முறையீடு செய்ய என்ன அவசரம்?' என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், "எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரிய தலைவரின் அதிகாரம் குறித்து நீதிபதி முடிவெடுத்துள்ளார். இது குறித்து விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக்கேட்ட நீதிபதி பல்வேறு நடைமுறைகள் இருக்கும் போது, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்தது ஏன்? பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்காமல் தனி நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணிநேரத்தில் உத்தரவு பிறப்பித்ததற்கான அவசியம் என்ன? பதில் அளிக்க 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் அளிக்க உரிமை இல்லையா? தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் எப்படி வெளியீட்டுத் தேதியை நிர்ணயிக்க முடியும்?

நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி பார்க்கும்போது வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.

Tags:    

Similar News