மனுசி படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு- வெற்றிமாறன் வழக்கு
- மாநில அரசை மோசமாக சித்தரிப்பு உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் என மறுப்பு.
- மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் அறம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் கோபி நயினார். இவர் இயக்கிய அறம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் கோபி நயினாரின் அடுத்த படம் "மனுசி" என்ற தலைப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெற்றி மாறன் தயாரித்துள்ளார். இயக்குநரின் முதல் படத்தை போன்றே இந்த படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை கொண்டிருக்கிறது. இதில் ஆன்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளார்.
இளையராஜா இசையமைத்துள்ள மனுசி படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கடந்த ஆண்டு வெளியிட்டார்.
இப்படத்தில் நடிகர் நாசர், தமிழ் மற்றும் ஹக்கிம் ஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறம் படத்தை போன்றே இப்படமும் சமூக பிரச்சினைகளை பேசும் கதைக்களம் கொண்டிருக்கும் என்பது டிரைலரில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மாநில அரசை மோசமாக சித்தரிப்பு உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தணிக்கை சான்று மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தயாரிப்பாளர் வெற்றிமாறன் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், நிபுணர் குழு அமைத்து 'மனுசி' படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், பட தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்,"பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சியை Edit செய்ய தயார்; படத்தை மறுஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.