சினிமா செய்திகள்

திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல் - சூரி வேதனை

Published On 2025-05-24 13:13 IST   |   Update On 2025-05-24 13:13:00 IST
  • மாமன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
  • இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது. தமிழ்நாடு முழுக்க ரசிகர்களுடன் திரையரங்கிள் சூரி படத்தை கண்டு மற்றும் ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

இந்நிலையில் மாமன் திரைப்படத்தை பலரும் அவர்களது செல்போன்களில் திருட்டு தனமாக பைரசி மூலம் பதிவிறக்கம் செய்து படத்தை பார்க்கின்றனர். பைரசியை கண்டிக்கும் விதமாக சூரி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் "ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று.

இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.

ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது.

ஒரு படம் வென்றாலும், தோற்றாலும்… அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு 'வியூ'க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம்.

திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.

இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.

எனவே என் பணிவான வேண்டுகோள்:

? திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்.

?️ திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்.

? உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது.

நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம்." என கூறியுள்ளார்.

Tags:    

Similar News