தர்ஷன் நடித்த சரண்டர் படத்தின் திரைவிமர்சனம்
- படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
- அனுபவ நடிப்பால் மனதில் பதிந்து இருக்கிறார் லால்.
கதைக்களம்
நாயகன் தர்ஷன் பயிற்சி எஸ்.ஐ.ஆக புறநகர் காவல் நிலையமான திருமழிசை ஸ்டேஷனில் பணிக்கு சேர்கிறார். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்க 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனது கைத்துப்பாக்கியை போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் லாலிடம் கொடுத்து வைக்கிறார். அந்த கைத்துப்பாக்கி ஸ்டேஷனில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போகிறது.
அதே சமயம் தாதாவான சுஜித்சங்கரிடம் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யும்படி பல கோடிகள் கொடுக்கப்படுகிறது. அந்தப் பணத்தை அவருடைய ஆட்கள் தொலைத்துவிடுகிறார்கள். துப்பாக்கியைத் தேடி தர்ஷனின் குழுவும் பணத்தைத் தேடி தாதா குழுவும் செல்லும் போது ஒரு புள்ளியில் சந்தித்து மோதிக்கொள்கிறார்கள்.
இறுதியில் காணாமல் போன துப்பாக்கி தர்ஷனுக்கு கிடைத்ததா? தாதாவுக்கு பணம் கிடைத்ததா? தர்ஷனும், தாதா சுஜித்தும் எதற்காக மோதிக் கொண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படம் முழுவதும் மிடுக்கான தோற்றத்தால் கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லனாக நடித்து இருக்கும் சுஜித், மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அனுபவ நடிப்பால் மனதில் பதிந்து இருக்கிறார் லால். குறிப்பாக வில்லன் குடோனில் இவரை அடைத்து வைக்கும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்து இருக்கும் பாடினி குமார், போலீசாக வரும் ரம்யா ராமகிருஷ்ணன், அருள் டி சங்கர், முனீஸ் காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் கணபதி. தேர்தல் சமயத்தில் பணம் பட்டுவாடா, துப்பாக்கி காணாமல் போவதை திரைக்கதையாக வைத்து இயக்கி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முனீஸ் காந்த் காமெடி டிராக்கை கொஞ்சம் சுவாரசியமாக கொடுத்து இருக்கலாம்.
இசை
இசையமைப்பாளர் விகாஸ் படிஷாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை இவருடைய இசை தாங்கி பிடித்து இருக்கிறது.
ஒளிப்பதிவு
மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
தயாரிப்பு
Upbeat Pictures தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது
ரேட்டிங் - 3/5