null
கிரைம் த்ரில்லரான Indra படத்தின் திரைவிமர்சனம்!
- போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார்.
- மனைவி இறப்புக்குப் பிறகு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
கதைக்களம்
போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, அதீத மதுப்பழக்கம் கொண்டவராக இருக்கிறார். அப்படி ஒரு நாள் ட்யூட்டியில் இருக்கும் போது குடித்துவிட்டு ஒரு விபத்தை ஏற்படுத்தியதால் இவரை பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார். இதனால் இவரது மதுப்பழக்கம் இன்னும் அதிகமாகிறது. இதனால் இவரது பார்வை பறிபோகிறது. இதற்கு பிறகு தன் மனைவி மெஹ்ரீன் பிர்சாடா துணையுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையில் ஒரே பாணியிலான தொடர் கொலைகள் நடக்கிறது. கொலையாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல்துறை சரியான துப்பு கிடைக்காமல் தடுமாற, திடீரென்று அதே பாணியில் வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரீன் பிர்சாடாவும், உள்பக்கம் தாளிட்ட வீட்டுக்குள் கொலை செய்யப்படுகிறார்.
காவல் துறை ஒருப்புறம் சைக்கோ கொலையாளியை தேட மறுப்புறம் சந்த் ரவியோ தனது மனைவியை கொலை செய்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க, தனது போலீஸ் நண்பரின் உதவியோடு களத்தில் இறங்குகிறார்.
வசந்த் ரவி கொலையாளியை கண்டுபிடித்தாரா?, உண்மையான கொலையாளி யார் ?, வசந்த் ரவியின் மனைவி எப்படி கொல்லப்பட்டார் ? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை திக்...திக்...திருப்பங்களோடு சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அழுத்தமான கதாபாத்திரத்தில் ஓவராக அல்லாமல் அளவாக நடித்திருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. கண் பார்வை இழந்தவராக மிக கச்சிதமாக நடித்திருப்பவர், மனைவி இறப்புக்குப் பிறகு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரீன் பிர்சாடா கணவரின் சரியில்லாத போக்கைப் பார்த்து கோபம் கொள்வதும், பிறகு அவருக்காக கலங்குவதும் என்று கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
சீரியல் கில்லராக நடித்திருக்கும் சுனில், தான் செய்யும் கொலைகளை கொண்டாடும் விதமும், மகிழ்ச்சியில் சிரிக்கும் விதமும் பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது.
அனிகா சுரேந்தர் அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் பார்வையாளர்களை கவர்கிறார்.
வசந்த் ரவியின் நண்பராக நடித்திருக்கும் நாகேந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடன இயக்குநர் கல்யாண் இருவரும் இயல்பாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் சபரிஷ் நந்தா, சைக்கோ கொலையை கதைக்களமாக கொண்டு திரைக்கதை அமைத்திருந்தாலும், அதன் பின்னணியில் ஒரு மிகப்பெரிய மர்ம முடிச்சோடு படத்தை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். நாம் பார்த்திராத ஒரு கதை பின்களத்தோடு இயக்கியுள்ளார் மேலும் படத்தில் வரும் திருப்பங்கள் யூகிக்க முடியாமல் இருப்பது படத்தின் பெரிய பலம். நாமே அந்த கொலையை இன்வெஸ்டிகேஷன் செய்யும் ஒரு உணர்வை உருவாக்கியது படத்தின் அடுத்த பலம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் லைட்டிங் மற்றும் பிரேம்கள் மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது.
இசை
இசையமைப்பாளர் அஜ்மல் தஷீன் இசையில் பாடலும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
தயாரிப்பு
JSM Movie Production, Emperor Entertainment நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்: 3/5