சினிமா செய்திகள்

மருதம்- திரைவிமர்சனம்

Published On 2025-10-12 11:21 IST   |   Update On 2025-10-12 11:21:00 IST
மோசடி மூலம் சிக்கியிருக்கும் தனது நிலத்தை மீட்க போராடும் ஒரு விவசாயியின் கதை.

ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயியான விதார்த் தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவுடன் உழைக்கிறார். இதற்காக அதிகளவில் கடனை பெற்று மகனை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்க்கிறார்.

இந்த சூழலில், தனது விவசாய நிலம் வங்கியில் ஏலம் விட்டதை தெரிந்து விதார்த் அதிர்ச்சி அடைகிறார். வாங்காத கடனுக்கு நிலம் எப்படி ஏலத்தில் போகும் என்றும் குழம்புகிறார்.

இதுதொடர்பாக விதார்த் வங்கியில் கேட்கும்போது, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கடன் வாங்கியிருந்தால் தந்தை இதை பற்றி சொல்லியிருப்பாரே என்றும் யோசிக்கிறார். இதில், ஏதோ மோசடி நடந்திருப்பதை விதார்த் உணர்கிறார். இந்த மோசடி பின்னணியில் இருக்கும் விஷயங்களை ஆராய்கிறார்.

இறுதியில் விதார்த் தனது நிலத்தை மீட்டாரா? மோசடியில் ஈடுபட்டது யார்? என்பதே மீதி கதை...

நடிகர்கள்

விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த், நிலத்தை மீட்க போராடும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். தனது நடிப்பின் அனுபவம் வெளிப்படுகிறது. ரக்ஷனா கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை காட்டியிருக்கிறார்.

சிறுவனாக நடித்துள்ள கார்த்திக் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அருள்தாஸ், சரவண சுப்பையா, மாறன், நாகராஜ் ஆகியோரின் நடிப்பு நினைவில் நிற்கிறது.

இயக்கம்

பட நேரம் குறைவு என்றாலும் இழுவையாக தெரிகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளை மோசடியாக சிலர் எப்படி சுரண்டுகிறார்கள்? என்பதை சொல்லி, அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்து திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வி.கஜேந்திரன்.

இசை

என்.ஆர்.ரகுநந்தன் இசை கதைக்கு கச்சிதம்.

ஒளிப்பதிவு

அருள் கே.சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவு கிராமத்து பசுமையைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News