ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா படத்தின் பெயரை மாற்ற முடிவு - நினைத்ததை சாதித்த சென்சார் வாரியம்!
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது
- 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்த 'ஜானகி vs. ஸ்டேட் ஆப் கேரளா' படம் சென்சார் வாரியம் மூலம் பிரச்சனையை சந்தித்தது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்துக்கு சீதா தேவியின் பெயரான ஜானகி என்ற பெயரை வைக்கக்கூடாது என சென்சார் வாரியம் கூறியது.
மேலும் படத்தில் 96 வெட்டுக்களை (EDIT) சென்சார் வாரியம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.
இதன் விசாரணையில், சென்சார் வாரியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் தங்கள் வாதங்களை முன்வைத்தார். படத்தின் தலைப்பை கதாநாயகியின் பெயரை பிரதிபலிக்கும் வகையில் 'வி. ஜானகி vs. கேரளா மாநிலம்' அல்லது 'ஜானகி வி. vs. கேரளா மாநிலம்' என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
படத்தில் வரும் நீதிமன்ற காட்சியில் கதாநாயகியின் பெயரை மியூட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற காட்சிகள் எதிர்காலத்தில் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடும் என்று அவர்கள் கூறினர்.
வாரியத்தின் வாதங்களைக் கேட்ட பிறகு, இந்த மாற்றங்கள் குறித்து படக்குழுவினர் தங்கள் கருத்தை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய இடைவேளைக்கு பிறகு ஆஜரான தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன், பரிந்துரைத்தபடி படத்தின் தலைப்பை மாற்றுவதற்கும், வசனங்களை மாற்றுவதற்கும் தனது தரப்பு சம்மதிப்பதாக தெரிவித்தார்.
அதே நேரம் படத்தில் பரிந்துரைக்கப்பட்ட 96 வெட்டுகளுக்கு பதிலாக 2 காட்சிகளில் மட்டும் வெட்டுக்கள் மேற்கொள்ள இரு தரப்புக்கும் இடையில் முடிவு எட்டப்பட்டது.