சினிமா செய்திகள்

ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகுமா? - சென்சார் வழக்கின் தீர்ப்பு நாளைக்கு ஒத்திவைப்பு

Published On 2026-01-07 17:07 IST   |   Update On 2026-01-07 17:07:00 IST
  • தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது
  • படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்தப்படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிர்வாணம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டது. அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்தார். ஆனால் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை" என்று வாதம் வைத்தார்.

மேலும், "யாருமே இன்னும் படத்தை பார்க்காத நிலையில் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ள நிலையில் யாரோ ஒருவர் அளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள்." என தயாரிப்பு நிறுவனம் வாதங்களை முன்வைத்தது.

இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஏன் படத்தை ஜன.10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? எனக்கூறி வழக்கை நாளை (ஜன.7) ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நீதிபதி கேள்விக்கு பதில் அளித்த சென்சார் போர்டு வழக்கறிஞர், "ஜனநாயகன் படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.

சென்சார் பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும்

ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்ட பிறகும், அதனை மறுதணிக்கைக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு. மறுதணிக்கை குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினோம். 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது

பின்னர் பேசிய நீதிபதி, "விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே சென்சார் போர்டுக்கு உத்தரவிட முடியும். தணிக்கை வாரியத்தின் Timeline-ஐ பின்பற்றித்தான் ஆக வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, நாளை காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News