இசைஞானி இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா தொடக்கம்
- இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.
- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடம் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் எம்.பி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர். திரையுலக பிரபலங்கள் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி உரையாற்ற உள்ளனர்.