null
'ஜன நாயகன்' படத்தை வெளியிட தொடர் முயற்சி: உச்சநீதிமன்றத்தை நாடியது படக்குழு
- 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
- மேல்முறையீட்டின் போது தங்களது தரப்பு பாதிப்புகளை எடுத்து கூறுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
'ஜன நாயகன்' படத்துக்கான தணிக்கை தொடர்பாக மறு விசாரணை குழுவினருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காத நிலையில் சட்ட ரீதியாக அதனை எதிர்கொண்டு படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது அடுத்த கட்ட ஆயத்த பணிகளை பட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து படக்குழுவினர் கூறும் போது, பொங்கலுக்கு விஜயின் 'ஜன நாயகன்' படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் . விநியோகஸ்தர்கள் மற்றும் பட அதிபர்களின் நிலையை கருத்தில் கொண்டும், தொழில் மற்றும் வியாபார நஷ்டங்களை தவிர்க்கும் வகையிலும் 'ஜன நாயகன்' படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டில் தங்களது தரப்பு பாதிப்புகளை படக்குழு விரிவாக கூறியுள்ளது.