சினிமா
ரஜினி

ரஜினியின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - பிரபல தயாரிப்பாளர் புகழாரம்

Published On 2021-07-14 23:04 IST   |   Update On 2021-07-14 23:04:00 IST
மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரபல தயாரிப்பாளர் கூறி இருக்கிறார்.
அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜென்டில் மேன் படத்தை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர் ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு... அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

வருடத்திற்கு ரஜினியின் இரண்டு படங்களாவது தொடர்ந்து வெளிவந்தால்தான் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும், பல்லாயிரக் கணக்கான சினிமா தொழிலாளர்களும், ரசிகர்களும் மகிழ்வார்கள். 

அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் சிதைந்து கிடக்கிறது. இந்த தருணத்தில் அவரது சரியான முடிவு திரையுலகினரின் மனங்களில் தேனை வார்க்கிறது.

ஒரு விநியோகஸ்தராக, ‘தங்கமகன்’, ’மூன்று முகம்’, படிக்காதவன்’, ’ஊர்க்காவலன்’, ’எஜமான்’, போன்ற அவரது நடிப்பில் வெளியான பல படங்ககளை நான் வெளியிட்டுள்ளேன்.


கே.டி. குஞ்சுமோன் - ரஜினி

என்னைப் போலவே ரஜினியின் படங்களால் பலர் லாபம் சம்பாதித்துள்ளனர். அவருடனான எனது பழக்கம் 40 வருடங்களுக்கும் மேலானது. சினிமாவில் அவர் ஒரு பணம் காய்க்கும் மரம். தயாரிப்பாளர்களின் தங்கப் புதையல், அனைவராலும் போற்றி காக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.

பூரண ஆரோக்கியத்தோடும் நல்ல உடல் நலத்தோடும், அவர் நீடுழி வாழ பிரார்த்திக்கிறேன். சினிமாவின் சிகரமாய் உயர்ந்து நிற்கும் அவருக்கு எனது மனமார்ந்த வணக்கங்கள், வாழ்த்துக்கள்.! வெல்டன் அண்ணாத்த.! என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Similar News