சினிமா
ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார்
சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார்.
பிரபல ஹாலிவுட் நடிகை டான்யா ராபர்ட்ஸ் காலமானார். அவருக்கு வயது 65.
1975-ல் ஃபோர்ட்ஸ்டு என்ட்ரி என்ற படத்தில் அறிமுகமான டான்யா, எ வியூ டூ கில் என்கிற ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் அடைந்தார். 1994-ல் கடைசியாகப் படங்களில் நடித்தவர், தொலைக்காட்சித் தொடர்களில் அதிகமாக நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
கிறிஸ்துமஸுக்கு முன் தினம் தனது செல்ல நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது மயங்கி விழுந்தார் டான்யா. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டதாகவும், பின்னர் உயிருடன் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் டான்யா மரணம் அடைந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டான்யாவின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.