சினிமா
ஷாநவாஸ்

திடீர் மாரடைப்பு.... 37 வயது இளம் இயக்குனர் ஷாநவாஸ் கவலைக்கிடம்

Published On 2020-12-23 13:43 IST   |   Update On 2020-12-23 13:43:00 IST
கரி, சுஃபியும், சுஜாத்தையும் போன்ற படங்களை இயக்கி பிரபலமான இளம் இயக்குனர் ஷாநவாஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாம்.
மலையாள படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ஷாநவாஸ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான கரி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய சுஃபியும், சுஜாத்தையும் படம் கடந்த ஜூலை மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இயக்குனர் ஷாநவாஸ் கடந்த வாரம் பாலக்காடு அருகில் உள்ள அட்டபாடியில் தங்கி தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



37 வயதே ஆகும் ஷாநவாஸ், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சுஃபியும், சுஜாத்தையும் படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாபு, ஷாநவாஸ் வெண்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், அவரது இதயம் இன்னும் துடித்துக் கொண்டு இருப்பதாக கூறினார். ஷாநவாஸுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ள அவர், அற்புதம் நடக்கும் என்று நம்புவோம். தவறான தகவல்களை பகிரவேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News