சினிமா
ஹரி

காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன் - இயக்குனர் ஹரி காட்டம்

Published On 2020-06-28 13:50 IST   |   Update On 2020-06-28 19:08:00 IST
காவல் துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக மிக மிக வேதனைப்படுகிறேன் என்று இயக்குனர் ஹரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து, அடித்துக் கொன்றதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 



தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் ஹரி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிட கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் ஹரி காவல்துறையை மையப்படுத்தி சாமி, சாமி ஸ்கொயர், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News