சினிமா
நோ டைம் டூ டை பட போஸ்டர்

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்

Published On 2020-06-15 15:06 IST   |   Update On 2020-06-15 15:06:00 IST
ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் 'நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது. 

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 25-வது படமாக 'நோ டைம் டூ டை’ தயாராகி வருகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கும் இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார். 



இந்தப் படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா உள்பட உலகின் மற்ற நாடுகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி இங்கிலாந்திலும், நவம்பர் 25-ந் தேதி அமெரிக்காவிலும் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி நவம்பர் 25-ந் தேதிக்கு பதிலாக நவம்பர் 20-ந் தேதி அமெரிக்க உள்பட உலகின் மற்ற நாடுகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் திட்டமிட்டபடி நவம்பர் 12-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News