சினிமா
ஜிபித் ஜார்ஜ்

31 வயதே ஆன இளம் இயக்குனர் மாரடைப்பால் மரணம்.... அதிர்ச்சியில் திரையுலகம்

Published On 2020-05-10 11:50 IST   |   Update On 2020-05-10 11:50:00 IST
31 வயதே ஆன இளம் இயக்குனர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலையாளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் கோழிபோரு. இப்படத்தை ஜிபித் ஜார்ஜ், ஜினோய் ஜனார்தனன் ஆகிய இரட்டை இயக்குனர்கள் இணைந்து இயக்கி இருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியான சில நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டது. ஊரடங்கு முடிந்த பின் இதை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ஜிபித் ஜார்ஜ் திடீரென மரணமடைந்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் வசித்து வந்த ஜிபித்துக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை அவர்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

பின்னர் நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்த ஜிபித்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 31. இளம் இயக்குனர் ஒருவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்திருப்பது மலையாள திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Similar News