சினிமா
சூரி

தனது ஓட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கிய சூரி

Published On 2020-04-05 12:34 IST   |   Update On 2020-04-05 12:34:00 IST
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சூரி, தனது ஓட்டலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளார்.
‘கொரோனா வைரஸ்’ ஒட்டுமொத்த உலகையும் மிரட்டிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கால் பல்வேறு துறையினரும் வீட்டில் முடங்கி உள்ளனர். அந்த வகையில் பசி, தூக்கம் மறந்து வேலை செய்து வந்த பிரபல நடிகர்-நடிகைகளுக்கும் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது. இந்த ஒய்வு நேரத்தை அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர். 

இதுகுறித்து நகைச்சுவை நடிகர் சூரி கூறியதாவது: “மனைவி குழந்தைகளுடன் பேசக்கூட நேரம் இல்லாமல், ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த எனக்கு பயம் கலந்த ஓய்வு கிடைத்து இருக்கிறது. இந்த ஓய்வில், வீட்டு வேலைகளில் மனைவிக்கு எப்படியெல்லாம் உதவ முடியுமோ, அப்படியெல்லாம் உதவுகிறேன். குழந்தைகளை குளிப்பாட்டி விடுகிறேன். சாப்பிட வைக்கிறேன். ஊரில் இருக்கும் உறவினர்களிடம் போன் மூலம் பேசி, நலம் விசாரிக்கிறேன். 



பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள்... அன்னியர்களை வீட்டுக்குள் விடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் நடத்தி வரும் ஓட்டல்களில், மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுத்து விட்டேன். அவர்களின் சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யாமல், முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன்.

இதேபோல் வறுமையில் வாடும் நாடக நடிகர்-நடிகைகளுக்கு நடிகர் சங்கம் மூலம் ரூ.1 லட்சம் கொடுத்து இருக்கிறேன். மூன்றாம் உலகப்போர் வந்தது போல் ஒரு அச்சத்தை கொரோனா ஏற்படுத்தி இருக்கிறது. அதனால் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

Similar News