சினிமா
பார்த்திபன்

நிறைய போதை வேண்டுமா.... இதை செய்யுங்கள் - ஐடியா கொடுக்கும் பார்த்திபன்

Published On 2020-04-03 06:03 GMT   |   Update On 2020-04-03 06:03 GMT
போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில்  நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் அறிவுரை கூறியுள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: இந்த 21 நாட்களில் ஒரு நல்ல விஷயத்தை முயற்சி செய்தால் அது நம் இயல்பாகவே மாறிவிடும். ஒரு கெட்ட விஷயத்தை விட்டுவிட்டால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும். உதாரணத்துக்கு, குடிப்பழக்கத்தை 21 நாட்கள் கைவிட்டுவிட்டால், அதன்பின் இந்த பழக்கம் இல்லாமல் போய்விடும். போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் தியானம் செய்யலாம். நம் உள்மனம் நோக்கிய ஒரு பயணம் தான் தியானம். 



மிஷின் போல் நமக்காக உழைக்கும் நமது உடலுக்காக தினமும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளை இந்த 21 நாட்கள் முயற்சி செய்தால் அது நம் இயல்பாகவே மாறிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களை பரப்புவதும் மிக முக்கியம். அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். மக்களாகிய நம் ஒத்துழைப்போடு, விரைவில் இந்தியா இந்த நோயில் இருந்து மட்டுமல்லாமல் எந்த போர் வந்தாலும் அதில் வென்று மிளிர்வது, ஒளிர்வது நிச்சயம். என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News