சினிமா
பூர்ணா

சினிமாவிற்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன் - பூர்ணா

Published On 2020-03-30 12:11 GMT   |   Update On 2020-03-30 12:11 GMT
சினிமாவிற்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன் என்று தமிழில் தற்போது தலைவி படத்தில் நடித்து வரும் பூர்ணா கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா தோற்றத்தில் பூர்ணா நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘சவரக்கத்தி’, போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மலையாள நடிகையான இவர் தனது வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு ரகசியங்களைப் பற்றி மனந்திறக்கிறார்!

எனது தந்தை காசிம், தாயார் ரம்லா பீவி. எனக்கு நான்கு சகோதரர்கள். சராசரி குடும்பத்தில் இருந்து திரை உலகிற்கு வந்த நான் இந்த அளவுக்கு உயர என்னைவிட அதிக பிரச்சினைகளை சந்தித்தது என் அம்மாதான். நான் சிறந்த நடிகையாகவேண்டும், புகழ்பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

நான் நடனம் கற்றுவிட்டு கோவில்களிலும் மற்ற வழிபாட்டு தலங்களிலும் ஆடினேன். அதனால் விமர்சனத்திற்குள்ளானேன். சினிமாவிற்கு வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டேன். ஆனால் நான் சார்ந்திருக்கும் மதத்தில் அதிக நம்பிக்கை கொண்டவள். நினைவு தெரிந்த நாளில் இருந்து எல்லா புண்ணிய நாட்களிலும் நோன்பிருக்கிறேன். இது தெரியாமல் என்னை விமர்சிக்கிறவர்களுக்கு நான் பதில்சொல்ல விரும்பவில்லை.

என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் அதைவிட ஒரு குழந்தையை கூடுதலாக பெற்று, ஆறு பேருக்கு அம்மாவாக விரும்புகிறேன். ஏனெனில் கர்ப்பம், பிரசவம் போன்றவைகளை நான் ரசித்து அனுபவிக்க விரும்புகிறேன்.

அம்மா, எனது சகோதரர்கள் நால்வரையும் சவுகரியமிக்க வசதியான மருத்துவமனைகளில் பிரசவித்திருக்கிறார். நான் மட்டும் ஆரம்ப சுகாதார மையத்தில் பிறந்திருக்கிறேன். கிராமங்களில் அப்போது பிரசவத்திற்காகவே ஒரு அறையைகட்டி வைத்திருப்பார்கள். நான் பிறந்த அந்த அறை, இப்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கிறது. அந்த பகுதிவழியாக செல்லும்போது அம்மா அதை சுட்டிக்காட்டி, ‘பெரிய நடிகையான பூர்ணா, இந்த பைவ் ஸ்டார் அறையில்தான் பிறந்தார்’ என்று சிரித்தபடி சொல்வார்.

எனக்கும் ஒரு காதல் இருந்தது. ஆனால் இருவருமே ஒருவருக்கொருவர் வலியை தராமல் பிரிந்துவிட்டோம். அந்த காதலை பற்றி என் குடும்பத்தினருக்கும், எனக்கு நெருக்கமானவர்களுக்கும் தெரியும். வீட்டில் எல்லோரது சம்மதத்துடனும் என் திருமணம் நடக்கவேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால் அந்த காதலில் அது நடக்காது என்பதை எங்களால் உணர முடிந்தது. என்றார்.
Tags:    

Similar News