சினிமா
திலீப்

திலீப் வழக்கில் சாட்சிகள் வாக்குமூலம்

Published On 2020-03-07 11:00 IST   |   Update On 2020-03-07 11:00:00 IST
நடிகையை 2017-ல் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் கைதான நடிகர் திலீப் வழக்கில் சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்த முன்னணி நடிகையை 2017-ல் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கைதானார்.

85 நாட்கள் சிறையில் இருந்த அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது வழக்கு விசாரணை கொச்சி கோர்ட்டில் விறுவிறுப்பாக நடக்கிறது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி திலீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.



இந்த வழக்கில் 136 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட நடிகை ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளார். இயக்குனர் லால், நடிகை ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ் ஆகியோரும் வாக்குமூலம் அளித்தனர்.

திலீப் ஏற்கனவே நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். பாதிக்கப்பட்ட நடிகையும், மஞ்சுவாரியரும் நெருங்கிய தோழிகள். எனவே மஞ்சுவாரியரும் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார். தற்போது நடிகை காவ்யா மாதவனின் தாயார் ஷியாமளா, நடிகர் இடைவேள் பாபு ஆகியோரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Similar News