சினிமா
பாரதி ராஜா - முரளி

தயாரிப்பாளர் சங்க தேர்தல் - பாரதிராஜா, முரளி போட்டி?

Published On 2020-02-20 13:38 IST   |   Update On 2020-02-20 13:38:00 IST
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் இயக்குனர் பாரதிராஜாவும், ராமநாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்கிற ராமசாமியும் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே ராமநாராயணன் 3 முறை தலைவராக இருந்தார். தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், தாணு ஆகியோர் தலைவரானார்கள். முந்தைய தேர்தலில் நடிகர் விஷால் தலைவராக தேர்வானார். அவரது பதவி காலம் முடிந்துள்ளது.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனை குழுவையும் அரசு நியமித்துள்ளது. வருகிற ஜூன் 30-ந் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. இதற்காக தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.

தேர்தலில் புதிய தலைவராக போட்டியிடுபவர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. டைரக்டர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு நிறுத்த தற்போதைய ஆலோசனை குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து அவரிடம் வற்புறுத்தி வருகிறார்கள்.

ராமநாராயணன் மகனும், தயாரிப்பாளருமான முரளி என்கிற ராமசாமியும் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் திரைக்கு வந்த மெர்சல், பொதுவாக என்மனசு தங்கம், மணல் கயிறு-2, தில்லுக்கு துட்டு, ஆறாது சினம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

தலைவரை போட்டியின்றி தேர்வு செய்யவும் முயற்சிகள் நடக்கின்றன. தலைவர் தவிர, 2 துணைத்தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Similar News