சினிமா
டேனியல் கிரெய்க்

கொரோனா வைரசால் ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு வந்த சிக்கல்

Published On 2020-02-19 07:47 IST   |   Update On 2020-02-19 07:47:00 IST
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்கும் மற்றும் படக்குழுவினருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜேம்ஸ்பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இதில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். முந்தைய கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் டேனியல் கிரெய்க்கே நடித்து இருந்தார்.

இனிமேல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடிக்க மாட்டேன் என்று டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். இது அவரது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் பெரிய மார்க்கெட் உள்ளது.



நோ டைம் டூ டை படத்துக்கு சீனாவில் இப்போதே ஆயிரக்கணக்கான தியேட்டர்களை ஒதுக்கீடு செய்து விளம்பரப்படுத்தும் பணி நடக்கிறது. படம் ரிலீசுக்கு முந்தைய நாள் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் டேனியல் கிரெய்க் உள்பட படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் பங்கேற்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

கொரோனா வைரஸ் உயிர்ப்பலியால் சீனாவே நிலைகுலைந்துள்ள நிலையில் டேனியல் கிரெய்க் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிறப்பு காட்சிக்கும் தடைவிதித்துள்ளனர்.

Similar News