சினிமா
அன்புச்செழியன்

வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் நேரில் ஆஜர்

Published On 2020-02-18 09:11 GMT   |   Update On 2020-02-18 09:11 GMT
சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் சினிமா பைனான்சியரான மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகம் என 38 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேருக்கும் வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் 3 நாட்களுக்குள் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. கடந்த 11-ந்தேதி மாலை நடிகர் விஜய் மற்றும் அன்புச்செழியனின் ஆடிட்டர்கள் வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகளை சந்தித்து ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர்.


அதன் தொடர்ச்சியாக மறுநாளும் அவர்களின் ஆடிட்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், கல்பாத்தி அகோரத்தின் மகளுமான அர்ச்சனா கல்பாத்தி நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்தில் ஆடிட்டருடன் நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

‘பிகில்’ திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர் களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், படத்துக்கான செலவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அர்ச்சனா கல்பாத்தியும், அவரது ஆடிட்டரும் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் பைனான்சி யர் அன்புசெழியன் இன்று சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம், சொத்து ஆவணங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.165 கோடி வருவாய்க்கு அவர் வரி கட்டுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News