சினிமா
ஜெயம் ரவி

ஜெயம் ரவி வீட்டு காவலாளிகளுக்கு சம்பள பாக்கி - போலீசில் புகார்

Published On 2019-09-28 06:16 GMT   |   Update On 2019-09-28 06:16 GMT
நடிகர் ஜெயம் ரவி வீட்டில் வேலை பார்க்கும் காவலாளிகளுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட் என்பவர் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் செக்யூரிட்டி நிறுவனத்தில் 150 காவலாளிகள் வேலை செய்கிறார்கள். அவர்களை பல்வேறு நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட வீடுகளுக்கும் காவல் பணிக்கு அனுப்பி வருகிறோம்.

இந்த நிறுவனத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவியின் வீட்டு பாதுகாப்புக்கு 2 காவலாளிகளை வேலைக்கு அனுப்பி வைத்தோம். அவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.



அவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பள பணம் ரூ.70 ஆயிரத்தை கொடுக்காமல் அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். பின்னர் அந்த 2 பேரில் ஒருவரை எங்களது நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே ஜெயம் ரவிக்கு தனிப்பட்ட முறையில் காவலாளியாக நியமித்து கொண்டனர்.

ஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரி என்பவர்தான் இதற்கு காரணமாக உள்ளார். இதுதொடர்பாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் மனு தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News