சினிமா

நானே படேகருக்கு எதிராக சாட்சி சொல்ல பயப்படுகின்றனர் - தனுஸ்ரீ தத்தா

Published On 2019-05-19 08:07 GMT   |   Update On 2019-05-19 08:07 GMT
நானே படகேருக்கு எதிராக சாட்சி சொல்ல பலரும் பயப்படுகிறார் என்று மீடூ இயக்கம் மூலம் புகார் கூறிய தனுஸ்ரீ தத்தா வேதனையுடன் கூறியுள்ளார்.
‘மீடு’ இயக்கம் கடந்த ஆண்டு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, பிரபல நடிகர் நானே படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

புகாரின் பேரில் நானே படேகர் மற்றும் டைரக்டர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புகாருக்கு மறுப்பு தெரிவித்த நானே படேகர், தனுஸ்ரீ தத்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில், நானே படேகர் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் குற்றமற்றவர் என போலீசார் தெரிவித்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இதை தனுஸ்ரீ தத்தா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நானே படேகர் குற்றமற்றவர் என யார் சொன்னது? இது வெறும் வதந்தி தான். நான் எனது வக்கீலிடம் பேசினேன். அவர் போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை உறுதிபடுத்தினார். போலீஸ் விசாரணை மெதுவாக நடப்பது உண்மைதான். சாட்சிகளை முன்வந்து வாக்கு மூலம் அளிக்க வைப்பதற்கு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.



முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை ஒன்று அல்லது 2 சாட்சிகள் மட்டுமே வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும் சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சிகள் பலர் இன்னும் வாக்குமூலம் அளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் அவர்கள் வாக்குமூலம் அளிக்க பயப்படுகிறார்கள். முதலில் வாக்குமூலம் அளிக்க முன்வந்த பலரும் தற்போது மாறி விட்டனர்.

சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை என தெரிவிக்குமாறு சாட்சிகளிடம் கூறி உள்ளனர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பலரின் முன்னிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது. நானே படேகர் அத்துமீறி நடந்து கொண்டார். இதை நான் தட்டிக் கேட்டபோது நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா, தயாரிப்பாளர் சமி சித்திக், இயக்குனர் ராகேஷ் சரங் ஆகியோர் என்னை பாராட்டினார்கள்.

நான் அங்கிருந்து வெளியேறிய போது எனது காரை அடித்து உடைத்தனர். இது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்று படப்பிடிப்பில் யார்-யார் இருந்தார்கள்? என்பதற்கு ஆவணங்கள் எதுவும் இல்லை என்கின்றனர். இது சந்தேகத்தை கிளப்புகிறது.

பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத்தான் நான் புகார் கொடுத்தேன். விசாரணை முழுமையாக முடிந்த பிறகு தான் உண்மை வெளிவரும்.

பாலிவுட்டில் நிறைய நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால் புகார் கொடுத்தால் தங்களுக்கு படவாய்ப்பு கிடைக்காது என கருதி தற்போது வரை அமைதியாக இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News