சினிமா

என்னையே மிஞ்சிட்ட - பிரபல நடிகரின் பாராட்டை பெற்ற வினோத் சாகர்

Published On 2019-03-28 17:37 GMT   |   Update On 2019-03-28 17:37 GMT
ராட்சசன் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்த வினோத் சாகரை, பிரபல நடிகர் என்னையே மிஞ்சிட்ட என்று பாராட்டி இருக்கிறார். #VinothSagar
ஒரு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்பவர்கள் கதாநாயகன், கதாநாயகி மற்றும் வில்லன். இவர்களையும் தாண்டி ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அப்படி சமீபத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் வினோத் சாகர்.

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம் குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘ராட்சசன்’. சூப்பர் ஹிட்டான இந்த படத்தில் இன்பராஜ் என்கிற ஆசிரியர் வேடத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் வினோத் சாகர். படம் பார்ப்பவர்களை பாதிக்க வைப்பதே ஒரு கதாப்பாத்திரத்தின் ஈர்ப்பு என்று சொல்லலாம். அப்படி பார்வையாலயே மிரட்டும் ஆசிரியர் வேடத்தில் நடித்த வினோத் சாகரின் கதாப்பாத்திரம் பார்ப்பவர்களையும் கோபப்படவும், பாராட்டவும் வைத்தது. இதுதான் ஒரு நடிகருக்கு ரசிகர்கள் தரும் சிறந்த அங்கிகாரம். இந்த கதாப்பாத்திரம் கொடுத்த அடையாளம் தான் இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படப்பிடிப்புகளுக்கும் பறந்து கொண்டிருக்கிறார் வினோத் சாகர்.

இது குறித்து வினோத் சாகர் கூறும்போது, ‘ராட்சசன் திரைப்படம் எனக்கு சிறந்த அடையாளத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு இயக்குனர் ராம் குமார் தான் காரணம். நான் இதற்கு முன் பிச்சைக்காரன் படத்தில் நடித்திருக்கிறேன். ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘குருதி ஆட்டம்’, ‘சாம்பியன்’, ‘சைரன்’, தெலுங்கில் உருவாகும் ராட்சசன் படத்திலும் நடிக்கிறேன். மலையாளத்தில் 2 படங்கள் நடிக்கிறேன்.



நான் துபாயில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்து வந்தேன். பின்னர் சென்னைக்கு வந்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறினேன். அதன் மூலம் நடிகராக மாறினேன். இதயம் திரையரங்கம் படத்தின் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் தான் எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதைத் தொடர்ந்து, நான், ஹரிதாஸ், ஆரஞ்சு மிட்டாய், உறுமீன் மற்றும் பல குறும்படங்களில் நடித்திருக்கிறேன்.

சவால்கள் நிறைந்த வேடங்களில் நடிக்க விருப்பம். அது நெகட்டிவ் வேடமாக இருந்தாலும் சரி, குணச்சித்திர கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி. என்னுடைய ரோல் மாடல் ராதாரவி சார். கொடுத்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்யக்கூடியவர். நாசர் சார் நடிப்பும் எனக்கு பிடிக்கும்.

ராட்சசன் படத்தை பார்த்து ராதாரவி சார் பாராட்டியது என்னால் மறக்க முடியாது. "40 வருடத்தில் நான் எவ்வளவோ வில்லத்தனம் பண்ணிருக்கிறேன். ஆனால், நீ பண்ண வில்லத்தனம் நான் பண்ணவில்லை. என்னை மிஞ்சிட்டா" என்று ராதாரவி சார் என்னை பாராட்டினார். மேலும், டப்பிங் யூனியனில் எனக்கு விருதும் கொடுத்தார். 

அடுத்தடுத்து வரும் படங்களில் கொடுத்த கதாபாத்திரத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பேன்’ என்றார் வினோத் சாகர்.
Tags:    

Similar News