சினிமா

சென்னை சர்வதேச திரைப்படவிழா - சிறந்த படங்களாக பரியேறும் பெருமாள், 96 தேர்வு

Published On 2018-12-21 05:55 GMT   |   Update On 2018-12-21 05:55 GMT
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘96’ சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டது. அமைச்சர் கடம்பூர் ராஜு இதில் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கினார் #CIFF #ChennaiInternationalFilmFestival
சென்னையில் 16-வது சர்வதேச திரைப்படவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

இந்தோசினி அப்ரிசியே‌ஷன் பவுண்டே‌ஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150-க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

சென்னையில் தேவி, தேவி பாலா, அண்ணா, கேசினோ, தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் ஆகிய 6 அரங்குகளில் படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. அமைச்சர் கடம்பூர்ராஜூ இதில் கலந்து கொண்டு சிறந்த படங்களுக்கு பரிசுகளை அளித்தார்.

சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்குரி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘ராட்சசன்’, ‘வட சென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புத் திரையிடலாக ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரையிடப்பட்டது.



‘பரியேறும் பெருமாள்’, ‘96’ ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசு அளிக்கப்பட்டது.

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படமும் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர் பிரேம்குமாருக்கும், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

‘வட சென்னை’ படத்தின் இயக்கத்துக்காவும், ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் தயாரிப்புக்காகவும் இயக்குநர் வெற்றிமாறனுக்கு நடுவர் குழுவின் சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.

இது தவிர சிறந்த மாணவர் பட விருது வரிசையில் ஏஞ்சலினா படமும், ஈஸ்ட்மேன் கிராமம் படமும் தேர்வு செய்யப்பட்டன. ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான்’ விருது இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வழங்கப்பட்டது. #CIFF #ChennaiInternationalFilmFestival #PariyerumPerumal #96The Movie

Tags:    

Similar News