சினிமா

அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடல், ஜெயலலிதா பாடினார்

Published On 2019-02-11 17:33 GMT   |   Update On 2019-02-11 17:33 GMT
வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.
வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

"அடிமைப்பெண்'' படத்துக்காக, "அம்மா என்றால் அன்பு'' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

"வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

"ரொம்ப சந்தோஷம்'' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

"அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது'' என்றேன்.

"எப்படி? எப்படி?'' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

`அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

`என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

- இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, "வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்'' என்றார்.

"அம்மா என்றால் அன்பு'' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, "அடிமைப்பெண்'' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.''

இவ்வாறு வாலி கூறினார்.

ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

"என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?'' என்று கேட்டார், வாலி.

"நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்'' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

"என்ன சந்தோஷ சமாசாரம்?'' என்று வாலி கேட்டார்.

"நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!'' என்று கூறிய எம்.ஜி.ஆர்., "உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை'' என்றார்.

கண் கலங்கி விட்டார், வாலி.

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, "கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?'' என்ற கேள்வி எழுந்தது.

கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

"உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

"நினைத்தேன் வந்தாய், நூறு வயது!'' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

"நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...'' என்று "எங்க வீட்டு பிள்ளை''யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

"அன்னமிட்ட கை'' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.''

- இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

"அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது'' என்றார்.

அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., "என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை'' என்றார்.

எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

"எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, "அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது'' என்று கூறினார்.

மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.
Tags:    

Similar News