சினிமா

லதா, மஞ்சுளா, சந்திரகலா எம்.ஜி.ஆருடன் ஜப்பான் பயணம்

Published On 2018-12-08 17:48 GMT   |   Update On 2018-12-08 17:48 GMT
"உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆருடன் லதா, மஞ்சுளா, சந்திரகலா ஆகியோர் ஜப்பான் பயணம் ஆனார்கள்.

அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-

"நடனம், நடிப்பு என்று 4 மாத கால பயிற்சிக்குப் பிறகு ஜப்பானுக்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு எம்.ஜி.ஆர். எங்களை அழைத்துச் செல்வதாக இருந்தார்.

பயணத்துக்கு சில நாட்கள் இருந்த நிலையில், திடீரென ஒரு நாள் நடிகர் அசோகனின் படத்தில் நான் நடிக்க வேண்டியிருக்கும் என்றார்கள்.

எனக்கு குழப்பம். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தை தொடங்குவார்கள் என்று அதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன். அதனால், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படம் பற்றி பேசுவார்கள் என்று நினைத்த நேரத்தில், நடிகர் அசோகன் "நேற்று இன்று நாளை" என்றொரு படம் தயாரிக்கிறார். அதில் எம்.ஜி.ஆருடன் நானும் மஞ்சுளாவும் கதாநாயகிகளாக நடிக்கிறோம் என்றார்கள்.

இதுபற்றி அரசல்புரசலாக கேள்விப்பட்டிருந்த ஒருநாளில் திடீரென "நாளையே படப்பிடிப்பு" என்றார்கள். அதுவும் பாடல் காட்சி படப்பிடிப்பு என்றார்கள்.

மறுநாள் கார் வந்து அழைத்துப் போனது. சத்யா ஸ்டூடியோவில் இறங்கியபோது அங்கே பிரமாண்ட செட் போட்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். மேக்கப்பில் தயாராக இருந்தார். டைரக்டர் ப.நீலகண்டன் என்னைப் பார்த்ததும், "இப்போது ஒரு பாடல் காட்சி எடுக்கப்போகிறோம். நீயும் எம்.ஜி.ஆரும் பாடி நடிக்கிறீர்கள்" என்றார்.

ஏற்கனவே, நடனப்பயிற்சி இருந்ததால், டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த 'மூவ்மெண்ட்'களை சுலபத்தில் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 'ரோமியோ ஜுலியட்' என்ற அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. 'ரோமியோ ஜுலியட்' என்ற வசன வரிகளைத் தொடர்ந்து 'இன்னொரு வானம் இன்னொரு நிலவு' என அந்தப் பாடல் தொடங்கும்.

குறித்த நேரத்தில் பாடல் காட்சி முடிந்ததும், ஜப்பான் போகும் தேதி உறுதியாகிவிட்ட தகவலை தெரிவித்தார்கள்.

நாளைக்கு புறப்பட இருந்த நேரத்தில் ஒருநாள் முன்னதாக அம்மாவையும் என்னையும் கம்பெனிக்கு வரச்சொன்னார் எம்.ஜிஆர். நாங்கள் போய் அவரைச் சந்தித்தபோது, அம்மாவிடம், "உங்கள் மகள் என் படத்தில் நடிப்பது தொடர்பாக 5 வருடம் காண்டிராக்ட் போட்டுக்கொள்வோம்" என்றார்.

அம்மா இந்த மாதிரியான விஷயத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவரது விழிகளில் தெரிந்தது. சட்டென அதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நான் ஒரு புது ஹீரோயினை என் செலவில் கஷ்டப்பட்டு உருவாக்குவேன். ஒரு படத்தில் நடித்ததும் கிடைத்த பெயருக்கு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க அழைப்பு வரும். நடிகைகளும் உடனே நடிக்கப் போய்விடுகிறார்கள். கடைசியில் பெரிய ஹீரோயின் ஆக்கிய எனக்கே கால்ஷீட் கிடைக்காது. இது எனக்கு தேவையா?"

இப்படிச் சொன்னவர், மிகவும் கனிந்த குரலில், "ஒருவரின் வளர்ச்சி என்பது என் மூலமாகவே இருந்தாலும், அவர்களின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு நான் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டேன். இந்த காண்டிராக்டு என்பது, ஒரு பாதுகாப்புக்காகத்தான். என் படங்கள் தவிர மற்ற படங்களில் வாய்ப்பு வந்தால், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு நடியுங்கள். நான் தடுக்கப் போவதில்லை" என்றார்.

அதன் பிறகு சந்தோஷமாக அந்த காண்டிராக்ட்டில் கையெழுத்து போட்டார், அம்மா.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நான், மஞ்சுளா, சந்திரகலா என 3 நாயகிகள். மூவருமே ஒன்றாகத்தான் ஜப்பானுக்கு பயணம் ஆனோம்.

பார்த்த மாத்திரத்திலேயே மஞ்சுளா படபடவென பேசி என்னை கவர்ந்து விட்டார். சந்திரகலா அமைதியாக தெரிந்தார். ஓரளவு பழகிய பிறகு தொடர்ந்து நட்பு பாராட்டினார். விமானப் பயணத்துக்கு முன்பே நாங்கள் மூவரும் நல்ல தோழிகளாகி விட்டோம்.

விமானப் பயணத்தின்போது என்னை வழியனுப்ப வந்த அம்மாவை தன் அருகில் அழைத்த எம்.ஜி.ஆர், "கவலைப்படாதீங்கம்மா. உங்க பொண்ணை எப்படி கூட்டிட்டுப் போறேனோ அப்படியே திரும்ப உங்களிடம் ஒப்படைப்பேன்" என்றார். அம்மாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன. எம்.ஜி.ஆருடன் அவரது மனைவி ஜானகியம்மாவும் வந்திருந்தார். "உங்க குழந்தையை நான் பார்த்துக்கறேன்" என்று அவரும் அம்மாவிடம் சொன்னார்.

வெளிநாட்டில் நாங்கள் போனது படப்பிடிப்புக்காக என்பதை மறந்து விட்டோம். பள்ளி நாட்களில், கல்லூரிக் காலத்தில் 'சுற்றுலா' வருபவர்கள் எப்படி ஜாலியாக அதைக் கொண்டாடுவார்களோ அந்த நிலையில்தான் நான், மஞ்சுளா, சந்திரகலா மூவருமே இருந்தோம்.படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சதா ஜாலிதான். மஞ்சுளா எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டேயிருப்பார். நான் அமைதி என்றால் அமைதி... அப்படி ஓர் அமைதியாக இருப்பேன்.

சந்திரகலா எங்கள் இருவருக்கும் அப்பாற்பட்டு 'மெச்சூர்டாக' இருப்பார்.படப்பிடிப்பினூடே ஒருமுறை எங்கள் இருவரையும் பார்த்த எம்.ஜி.ஆர், "ஒண்ணு (நான்) பேசவே மாட்டேங்குது. ஒண்ணு (மஞ்சுளா) பேச்சை நிறுத்த மாட்டேங்குது" என்று கிண்டலாக சொல்லிவிட்டுப் போனார். அதற்குப்பிறகு நான் கொஞ்சம் பேச ஆரம்பித்தேன்."

இவ்வாறு லதா கூறினார்.
Tags:    

Similar News