சினிமா
நடிகை குட்டி பத்மினி, கலை நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது, அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பமே, சின்னத்திரைக்கு அவர் வரக் காரணமாக அமைந்தது.
நடிகை குட்டி பத்மினி, கலை நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது, அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பமே, சின்னத்திரைக்கு அவர் வரக் காரணமாக அமைந்தது.
அதுபற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-
"சிங்கப்பூர் நாதன் என்ற கலை நண்பர் மூலம் ஒரு "ஸ்டார் நைட்'' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், `மேஜிக்' ராதிகா உள்ளிட்ட குழுவினருடன் என்னையும் அழைத்திருந்தார்கள்.
கலை நிகழ்ச்சியில் `மதி ஒளி' சண்முகம் எழுதிய "பட்டு மாமி கிட்டு மாமா'' என்ற நகைச்சுவை நாடகத்தில் நடித்தேன். நாடகத்தில் என் காமெடி நடிப்புக்கு கரகோஷம் கிடைத்தது. அதோடு அப்போது பிரபலமான தில்லானா மோகனாம்பாள் படப்பாடலான "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?'' என்ற பத்மினி பாடலுக்கும் நடனமாடுவேன்.
சிங்கப்பூர், அப்போது சுதந்திரம் பெற்றிருந்த நேரம். லீ குவான் யூ முதல் பிரதமராக பொறுப்பேற்றிருந்தார். இந்த நேரத்தில் `ஸ்டார் நைட்' நிகழ்ச்சிக்கு போயிருந்தபோதுதான் என் வாழ்க்கையில் திருப்பம். நடன நிகழ்ச்சி முடித்துவிட்டு என் அறைக்கு வந்தபோது ஒரு சிறு பெட்டியை பார்த்தேன். அதில் இருந்த திரை மாதிரியான கண்ணாடியில் ஏதோ ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருந்தது. அதன் மூலம் சினிமா படங்களையும் பார்க்க முடியும் என்றிருந்தபோது ஆர்வத்தில் அது பற்றி விசாரித்தேன். அப்போதுதான் அது டெலிவிஷன் பெட்டி என்பது தெரியவந்தது. நான் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விட்டேன்.
சிங்கப்பூர் தமிழ்ச் சங்கத்தை சேர்ந்த கோவிந்தராஜன் எங்கள் கலைக்குழுவினரிடம், "பிரதமர் ஒரு விழா நடத்துகிறார். அதில் நீங்களும் நிகழ்ச்சி நடத்தவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
எங்கள் நிகழ்ச்சிகள் முடிந்து இரண்டு நாளைக்குப் பிறகே அந்த விழா என்பதால் சிலர் பங்கேற்க முடியாது என்று தெரிவித்தார்கள். சிலர் பெரிய தொகை சம்பளமாக கேட்டார்கள். நான் மட்டும், "நான் நிகழ்ச்சியில் நடனமாடுகிறேன். எனக்கு சம்பளம் எதுவும் தேவையில்லை. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். உங்கள் பிரதமரை நான் சந்தித்து பேச அனுமதி வேண்டும்'' என்றேன். அவரும், "உங்கள் கோரிக்கையை பிரதமரின் பார்வைக்கு கொண்டு சேர்க்கிறேன்'' என்றார்.
விழா நடந்தது. என் நடனமும் நடந்தது. பிரதமர் பாராட்டிப் பேசும்போது என் பெயரைக் குறிப்பிட்டு, "என்னை நேரில் சந்தித்துப் பேச, தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் பத்மினி அனுமதி கோரியுள்ளார். அவர் என்னை சந்திக்க விரும்பிய காரணத்தை, இந்த மேடையிலேயே கூறலாம்'' என்று கூறினார்.
கிடைத்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில், "உங்கள் நாட்டில் பிரபலமாகியிருக்கும் டெலிவிஷன் என்னைக் கவர்ந்து விட்டது. அதன் தொழில் நுட்பம் பற்றி உங்கள் நாட்டில் தங்கி கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்னை அனுமதிக்க வேண்டும்'' என்றேன்.
பதிலுக்கு பிரதமர், "எங்கள் சுதந்திர நாட்டின் முதல் பிரகடனமே, "எல்லாருக்கும் கல்வி அறிவு புகட்டுவோம்'' என்பதுதான். இங்கே 6 மாதம் தங்கியிருந்து டெலிவிஷன் தொழில் நுட்பத்தை இலவசமாக கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்கிறேன்'' என்றார்.
நான் இப்படி 6 மாதம் தங்கியிருந்ததில் அம்மாவுக்கு வருத்தம். கதாநாயகி வாய்ப்பு வந்து வந்து போகிறதே என்ற வருத்தம்தான். ஆனாலும் நான் விடாப்பிடியாக 6 மாத பயிற்சியில் டெலிவிஷன் தொழில் நுட்பம் கற்றுக்கொண்ட பிறகே சென்னையில் காலெடுத்து வைத்தேன்.''
இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.
சிங்கப்பூரில் 1971-ம் வருடம் இப்படி `டிவி' பற்றி தெரிந்து கொண்ட குட்டி பத்மினிக்கு 1975-ல் தமிழ்நாட்டில் உதயமான தூர்தர்ஷன் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. தூர்தர்ஷன் தொடங்கிய முதல் நாளில் ஒளிபரப்பான முதல் நாடகம் "அமுதசுரபி''யில் குட்டி பத்மினி நடித்திருந்தார். இந்த நாடகம்தான் சிவாஜி நடித்த முதல் சின்னத்திரை நாடகம். இந்த நாடகத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்திருந்தார்.
தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட டிவி நாடகங்களில் நடித்து பிஸியான சின்னத்திரை நட்சத்திரமானார் குட்டி பத்மினி. இதுபற்றி அவர் கூறும்போது, "சினிமாவில் கதாநாயகியாக நடித்தால் என்னென்ன கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேனோ, அத்தனை விதவிதமான கேரக்டர்களும் எனக்கு சின்னத்திரையில் வாய்த்தன'' என்று முகம் மலர்கிறார்.
டிவி நாடகத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் தொடர்ந்து கூறியதாவது:-
"சினிமா மாதிரி டிவியில் கட்டிப்பிடித்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமா கதாநாயகி என்றால் என்னதான் நடிப்புத்திறமை இருந்தாலும், கிளாமர் காட்சியில் தவிர்க்க முடியாமல் நடிக்க வேண்டி வரும். இப்படி நடிக்க எனக்கு விருப்பம் இல்லாததும், சினிமா கதாநாயகி வாய்ப்பை இயல்பாகவே எனக்கு தூரமாக்கி விட்டதாக இப்போது உணர்கிறேன்'' என்றார்.
பின்னாளில் குட்டி பத்மினி சின்னத்திரை தயாரிப்பாளராகவும் ஆனார். சென்னை தூர்தர்ஷனில் தொடர் தயாரிக்க விண்ணப்பித்து தொடர்ந்து மூன்றாண்டுகளாக `பதில்' இல்லாத நிலையில் டெல்லி போய் தூர்தர்ஷன் கதவை தட்டினார். அங்கே அவருக்கு கிடைத்ததோ `டெலிபிலிம்' தயாரிப்பதற்கான அனுமதி. அதற்கென கொடுக்கப்பட்ட 21/2 லட்ச ரூபாயில் `தராசு' என்ற டெலிபிலிமை தயாரித்தார். தரம் கருதி மேலும் 21/2 லட்சம் செலவழித்தார்.
டெலிபிலிமை டைரக்டர் ஹரிகரன் இயக்கினார். (இவர் ரகுவரன் அறிமுகமான `ஏழாவது மனிதன்' படத்தை இயக்கியவர்) டெலிபிலிமில் டெல்லி கணேஷ் ஜோடியாக குட்டி பத்மினியே நடித்தார். சுஷ்மா அவுர்ஜா திரைக்கதை. இந்த டெலிபிலிம் அகில இந்திய அளவில் சிறந்த விருதை பெற்றது. புகழ் பெற்ற `ராபா' நிறுவனத்தின் விருதும் கிடைத்தது. தயாரிப்பில் இவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. வருமானவரி இலாகாவுக்கு இவர் தயாரிக்க கொடுத்த இந்தி சீரியல் "ஷாங்கஸ்.''
"இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த நாடகம் என்ற பெருமை இந்த சீரியலுக்கு இன்னும் இருக்கிறது'' என்கிறார், குட்டி பத்மினி.
தூர்தர்ஷனைத் தொடர்ந்து தனியார் சேனல்களுக்கும் தொடர்களை தயாரித்து வழங்கி வரும் குட்டி பத்மினி, இப்போதும் புதிய தொடர் ஒன்றை தயாரிக்கும் பணியில் இருக்கிறார்.
குட்டி பத்மினி காதல் திருமணம் செய்து கொண்டவர். கணவர் பிரபு நேபாலும் சீரியல் தயாரிப்பில் இருந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா, ரித்னிகா, ஆர்யா என மூன்று மகள்கள் உள்ளனர்.