சினிமா

குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த புன்னகை அரசி கே.ஆர்.விஜயா

Published On 2016-07-18 21:25 IST   |   Update On 2016-07-18 21:25:00 IST
தன் வசீகரப் புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் "புன்னகை அரசி'' கே.ஆர்.விஜயா.
குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த புன்னகை அரசி கே.ஆர்.விஜயா

தன் வசீகரப் புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயத்தில் தனி இடம் பிடித்தவர் "புன்னகை அரசி'' கே.ஆர்.விஜயா.

இவரது பூர்வீகம் திருச்சூர். இயற்பெயர் தெய்வநாயகி.

தந்தை சித்தூரில் நகைக்கடை வைத்திருந்தார். விஜயா தன் தாயாருடன் திருச்சூரில் வசித்து வந்தார்.

தந்தைக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், குடும்பம் பழனிக்கு குடியேறியது.

பழனிக்கு வரும் பக்தர்களுக்கு விஜயாவின் தந்தை உதவிகள் புரிவார். தந்தையைப் பார்க்க, மலை உச்சிக்கு தினமும் ஐந்தாறு முறை ஏறிச்செல்வார், விஜயா.

பழனியில் அம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. விஜயா பத்து வயதாக இருக்கும்போது, அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் நடனம் ஆடினார்.

பின்னர், கே.பி.தங்கமணி என்பவர் நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். வால்பாறை, தாராபுரம், காங்கேயம் முதலிய இடங்களில் நடந்த நாடகங்களில் பங்கு கொண்டார்.

இந்த சமயத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு நாடகங்களில் நடிப்பதற்காக பழனிக்கு வந்தார். நாடகம், நடனம் ஆகியவற்றில் கே.ஆர். விஜயாவுக்கு உள்ள திறமை பற்றி நண்பர்கள் மூலம் அறிந்தார். விஜயாவை பார்க்க விரும்பினார். அப்போது, திருச்சூரில் இருந்த தன் பாட்டி வீட்டுக்கு அவர் சென்றிருந்தார்.

"அதனால் என்ன? எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சென்னை வந்து என்னைப் பார்க்கலாம்'' என்று விஜயாவின் தந்தையிடம் தெரிவித்தார், தங்கவேலு.

திருச்சூரில் இருந்து கே.ஆர்.விஜயா திரும்பியதும், நடந்ததை அவரிடம் கூறினார், அவர் தந்தை. தக்க சமயத்தில் சென்னைக்குச் செல்வதென்று இருவரும் முடிவு செய்தனர்.

இந்த சமயத்தில் பழனியில் பொருட்காட்சி நடந்தது. அப்போது பிரபல திரைப்பட நடிகராக விளங்கிய எஸ்.எம்.குமரேசன் (ஜுபிடரின் `அபிமன்ï' படத்தில் கதாநாயகனாக நடித்தவர்) பழனி பொருட்காட்சியில் நாடகம் நடத்த வந்திருந்தார். அவருடைய "வள்ளித் திருமணம்'' நாடகத்தில் துணை நடிகையாக நடிக்கும் வாய்ப்பு கே.ஆர்.விஜயாவுக்கு கிடைத்தது.

விஜயாவின் புன்னகையும், நடிப்பும் குமரேசனை கவர்ந்தன. "சென்னைக்கு வரும்போது என்னைப் பாருங்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறேன்'' என்று விஜயாவிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து, 1961-ம் ஆண்டு கடைசியில், கே.ஆர்.விஜயாவின் குடும்பம் சென்னையில் குடியேறியது.

அப்போது, கதாசிரியர் விருதை ந.ராமசாமி ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார். அதில் கே.ஆர்.விஜயா சேர்ந்து சில நாடகங்களில் நடித்தார்.

பி.ஏ.குமார் தயாரித்த "மகளே உன் சமத்து'' என்ற படத்தில், கே.ஆர்.விஜயாவுக்கு சிறு வேடம் கிடைத்தது.

நிïடோன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. எம்.ஆர்.ராதா நடித்த காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அவருக்கு இரண்டு பக்கமும், இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கே.ஆர்.விஜயா.

அவரைப் பார்த்த எம்.ஆர்.ராதா, "உன் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

"தெய்வநாயகி'' என்று மெல்லிய குரலில் கூறினார், விஜயா.

"தெய்வநாயகியா? நோ... நோ...! இதெல்லாம் ஓல்டு மாடல் பெயர். சினிமாவுக்கு எடுபடாது. விஜயா... கிஜயா... இப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்!'' என்றார், ராதா.

அவர் கருத்தை விஜயாவின் தந்தை அப்படியே ஏற்றுக்கொண்டார். அன்றே தெய்வநாயகி, கே.ஆர்.விஜயாவாக மாறினார்.

இதன்பின், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தயாரித்த "முத்து மண்டபம்'' படத்தில், ஊனமுற்ற பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு கே.ஆர்.விஜயாவுக்கு கிடைத்தது.

பின்னர் "விளக்கேற்றியவள்'' படத்திற்கு ஒப்பந்தம் ஆனார்.

இதன் இடையே, மலையாளப்பட உலகில் இருந்து அழைப்பு வந்தது. "கால்பாடுகள்'' என்ற மலையாளப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

இந்த சமயத்தில், கே.ஆர்.விஜயாவின் வாழ்க்கையில் மாபெரும் திருப்பம் ஏற்பட்டது.

Similar News