சினிமா

ஒய்.ஜி.பார்த்தசாரதி நிராகரித்த நாடகம்

Published On 2016-05-30 21:42 IST   |   Update On 2016-05-30 21:42:00 IST
ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நிராகரித்த நாடகத்தை, சிவாஜிகணேசன் ஏற்று நாடகமாக நடித்தார்.
ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி நிராகரித்த நாடகத்தை, சிவாஜிகணேசன் ஏற்று நாடகமாக நடித்தார். பிறகு சினிமாவாகவும் எடுத்தார். அதுதான் மகத்தான வெற்றி பெற்ற "வியட்நாம் வீடு.''

ஒய்.ஜி.பி.யின் நாடகக் குழுவில் நடித்தவர்களில் பலர், பிறகு சினிமாவில் புகழ் பெற்றார்கள். நடிகை லட்சுமி இந்தக் குழுவில் நடித்தவர்தான்.

இந்த நாடகக் குழுவின் "கண்ணன் வந்தான்'' நாடகம்தான் சிவாஜியின் நடிப்பில் "கவுரவம்'' என்ற பெயரில் படமாக வந்தது. அதில் உஷா நந்தினியும், ரமா பிரபாவும் நடித்த இரு வேடங்களையும், நாடகத்தில் லட்சுமி ஒருவரே செய்தார்.

இன்றும், மகேந்திரனிடம் "வாடா போடா'' என்று உரிமையுடன் பேசக்கூடியவர், லட்சுமி மட்டுமே.

"வியட்நாம் வீடு'' சுந்தரம், இந்த நாடகக் குழுவில், நாடக உதவியாளராக தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர்.

அவர் முதலில் எழுதிய நாடகத்தை மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி படித்து விட்டு, "நிறைய பிராமண வாடை வீசுகிறது'' என்று கூறி, திருப்பிக் கொடுத்து விட்டார். அதை சிவாஜியிடம் சுந்தரம் கொடுக்க, அவர் அதை "வியட்நாம் வீடு'' என்ற பெயரில் முதலில் நாடகமாக நடத்தி, பிறகு சினிமாவாகவும் எடுத்தார். "பிரஸ்டீஜ்'' பத்மநாபன் ரோல், சிவாஜியின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது.

வெறும் சுந்தரம், "வியட்நாம் வீடு'' சுந்தரம் ஆனார்.

நாடகத்தில், எல்லாவிதமான கேரக்டர்களையும் மகேந்திரன் நடித்துள்ளார். வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "ரூபாய்க்கு மூன்று கொலை'' என்ற நாடகத்தில், ஆல்பிரெட் அண்டு சுப்பு என்ற இரட்டை வேடங்களை மேடையில் நடித்துக்காட்டி அசத்துவார்.

இன்று `புதுமை' என்று கருதப்படுகிற சில விஷயங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார், மகேந்திரன். "சக்தி'' என்ற நாடகத்தை சுழல் மேடையில் நடத்தினார். அதில் பார்வையற்ற பெண்ணாக, மகேந்திரனின் மகள் மதுவந்தி நடித்தார். அந்த நாடகத்தைப் பார்த்த பாலசந்தர், அவர் நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். "கண்ணற்ற பெண்ணின் நடிப்பை கண்ணாலேயே காட்டிவிட்டாய்!'' என்று கூறினார்.

ஆரம்பத்தில் மகேந்திரன் நாடகங்களை ஒய்.ஜி.பார்த்தசாரதியும், பட்டுவும் டைரக்ட் செய்தனர். பிறகு ஏ.ஆர்.எஸ்.டைரக்ட் செய்தார். "ரகசியம் பரமரகசியம்'' முதல் இன்று வரை அவர் நாடகங்களை அவரே டைரக்ட் செய்து வருகிறார்.

மகேந்திரனின் நாடகக் குழுவில் "சோ''வும் நடித்திருக்கிறார். "பெற்றால்தான் பிள்ளையா'' நாடகம் "பார் மகளே பார்'' என்ற பெயரில் படமானபோது, நாடகத்தில் செய்த அதே "மெக்கானிக்'' ரோலை படத்திலும் அவர்தான் செய்ய வேண்டும் என்று சிவாஜி கூற, அதன்படி நடித்தார், "சோ.'' அவருடைய அந்த முதல் படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து படங்களில் நடித்தார்.

ஒருமுறை, "ரகசியம் பரம ரகசியம்'' நாடகத்துக்கு கவிஞர் கண்ணதாசன் திடீரென்று வந்தார். நாடகத்தைப் பார்த்துவிட்டு, "ரொம்ப நாளைக்குப் பிறகு, என்.எஸ்.கே. தரத்தில் ஒரு நாடகத்தைப் பார்த்தேன்'' என்று பாராட்டினார்.

பூரித்துப்போனார், மகேந்திரன்.

மகேந்திரனின் நாடகக்குழு (ï.ஏ.ஏ.) கடந்த 54 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து 54 ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரே நாடகக்குழு இதுதான்.

"எந்த சூழ்நிலையிலும் நாடகம் போடுவதை நிறுத்துவதில்லை'' என்று மகேந்திரனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார், அப்பா ஒய்.ஜி.பி. எனவே, இந்த நாடகக் குழுவின் கலைப்பயணம் இன்னும் தொடருகிறது. "என்றும் தொடரும்'' என்று உறுதியுடன் கூறுகிறார், மகேந்திரன்.

தனியார் சேனல்கள் வராதபோது, முதன் முதலில் சென்னை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நாடகம் "வாலிபம் திரும்பினால்.'' இதில் ஒய்.ஜி.பார்த்தசாரதியும், ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்தார்கள். இது, வெங்கட் எழுதிய நாடகம்.

சின்னத்திரையில் மகேந்திரன் நடிக்கத் தொடங்கி 31 ஆண்டுகள் ஆகிவிட்டன.

தனியார் தொலைக்காட்சிகளில் நிறைய தொடர்களில் நடித்திருக்கிறார். "எனக்குள் அவன்'', "மிஸ்டர் பிரைன்'' போன்ற தொடர்களைத் தயாரித்தார். "ருத்ரவீணை'', "சிதம்பர ரகசியம்'' முதலான தொடர்களில் நடித்தார்.

திரைப்படத் துறையிலும், மகேந்திரனின் பயணம் தொடருகிறது.

அவருடைய 200-வது படம் "தாலிதானம்.'' நிஜ வாழ்க்கையில் அண்ணன் - தங்கை போல பாசம் கொண்டுள்ள மகேந்திரனும், லட்சுமியும் அதே பாசத்தை வெளிப்படுத்தி, அற்புதமாக நடித்த படம் இது.

"ஜாம்பவான்'' படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்துள்ள மகேந்திரன், "அடாவடி'' படத்தில் சத்யராஜின் அப்பாவாக நடிக்கிறார்.

"ஸ்ருங்காரா'' என்ற ஆர்ட் படத்தில், கோவில் குருக்கள் வேடம். "பெரியார்'' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

`சித்ராலயா' கோபுவின் வாரிசான சித்ராலயா ஸ்ரீராம், மகேந்திரன் குழுவுக்கு எழுதிய "காதலிக்க நேரமுண்டு'' சினிமாவாகப் போகிறது.

ஸ்ரீராம் எழுதிய மற்றொரு நாடகம் "தந்திரமுகி.'' அது, மகேந்திரனின் சமீபத்திய வெற்றி நாடகம்.

Similar News