1000 கிமீ ரேன்ஜ் வழங்கும் புது காசெப்ட் கார் - இந்தியாவில் காட்சிப்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ்!
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடல் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது.
- புது பென்ஸ் கான்செப்ட் காரின் எல்இடி ஹெட்லைட்கள் மெர்சிடிஸ் பென்ஸ் EQS மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சார்பில் மூன்றாவது சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியை ஒட்டி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது விஷன் EQXX கான்செப்ட் காரை இந்திய சந்தையில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX மாடல் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
டிசைனை பொருத்தவரை புதிய மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX கான்செப்ட் கார் தோற்றத்தில் அசத்தலாக காட்சியளிக்கிறது. இந்த காரில் ஸ்லோபிங் ரூஃப்லைன், பின்புறம் நீண்டு மெல்லியதாக காட்சியளிக்கிறது. இவைதவிர மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX மாடலின் எல்இடி ஹெட்லைட், மெர்சிடிஸ் பென்ஸ் EQS மாடலில் உள்ளதை போன்றே தெரிகிறது. இத்துடன் ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், ஃபுல் விட்த் எல்இடி டெயில் லேம்ப்கள் உள்ளன.
மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் EQXX கான்செப்ட் கார் தோற்றத்தில் ஃபார்முலா 1 கார் போன்று இல்லை என்ற போதிலும், சில தொழில்நுட்பங்கள் ஃபார்முலா 1 காரில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இவை மெர்சிடிஸ் பென்ஸ் காரை பெரிய பேட்டரி பேக்- குறைக்கப்பட்ட எடை மற்றும் கச்சிதமான அளவீடுகளை பெற உதவி இருக்கிறது. அந்த வகையில் இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
இந்த கான்செப்ட் காரில் 241.65 ஹெச்பி திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இத்துடன் இந்த காரின் மேற்கூரையில் உள்ள சூரிய தகடுகள் காரின் ரேன்ஜ்-ஐ 25 கிலோமீட்டர்கள் வரை அதிகப்படுத்தும் என மெகர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது.