கார்

டெஸ்டிங்கில் சிக்கிய வால்வோ எலெக்ட்ரிக் கார் - விலை மற்றும் முழு விவரங்கள்

Published On 2025-07-30 10:23 IST   |   Update On 2025-07-30 10:23:00 IST
  • இந்தியாவில் 69 kWh NMC பேட்டரி பேக்கை ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் AWD வேரியண்ட்களுடன் வழங்க வாய்ப்புள்ளது.
  • இந்த யூனிட் 427 bhp பவர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 474 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தனது கார் மாடல்களை பல்வகைப்படுத்த வால்வோ தயாராகி வருகிறது. இதற்காக அந்நிறுவனம் புதிய மாடல்களை பட்டியலில் கொண்டு வருகிறது. சமீபத்தில், இந்த நிறுவனத்தின் வரவிருக்கும் வாகனமான வால்வோ EX30, இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

வால்வோ EX300 மிகச்சிறிய மற்றும் மிகவும் மலிவு விலை மின்சார SUV என்று கூறப்படுகிறது. மேலும் இது சர்வதேச சந்தையில் வால்வோ EX40 மற்றும் EC40 மாடல்களின் கீழே வைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்:

சர்வதேச சந்தையில் விற்கப்படும் வால்வோ EX30, நிறுவனத்தின் சஸ்டெயினபிள் எக்ஸ்பீரியன்ஸ் ஆர்கிடெக்ச்சர் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் சர்வதேச மாடல்கள் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களைப் பெற்றாலும், இந்த நிறுவனம் இந்தியாவில் 69 kWh NMC பேட்டரி பேக்கை ஒற்றை மோட்டார் மற்றும் இரட்டை மோட்டார் AWD வேரியண்ட்களுடன் வழங்க வாய்ப்புள்ளது.



இந்த யூனிட் 427 bhp பவர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 474 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் வடிவமைப்பு:

வால்வோ EX30 அதன் வடிவமைப்பு அம்சங்களை வால்வோ EX90 எஸ்யூவி-யில் இருந்து பெற்றதாகத் தெரிகிறது. சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட கார் பெரிதும் உருமறைப்பு செய்யப்பட்டிருந்தாலும், நேர்த்தியான LED ஹெட்லைட்கள், சிக்னேச்சர் தோர் ஹேமர் LED DRLகள், பிக்சல்-ஸ்டைல்டு டெயில்-லைட்கள் போன்ற வெளிப்புற சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

எதிர்பார்க்கப்படும் இன்டீரியர்:

உள்புறத்தில், வால்வோ EX30 சர்வதேச மாடல்களில் காணப்படும் அதே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 12.3-இன்ச் செங்குத்தாக பொருத்தப்பட்ட டச் ஸ்கிரீனுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட கூகுள் சார்ந்த இன்ஃபோடெயின்மென்ட் ஓஎஸ் உடன் இயக்கப்படுகிறது.

வெளியீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை:

வால்வோ EX30 காரை உள்ளூரில் அசெம்பிள் செய்வதற்கான திட்டங்களை நிறுவனம் மதிப்பீடு செய்து வருவதாகவும், இது மலிவு விலையில் கிடைக்கக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மின்சார எஸ்யூவி-யின் வெளியீட்டு தேதியை நிறுவனம் இன்னும் கூறவில்லை. இருப்பினும், பண்டிகை காலத்தில் ரூ.42-45 லட்சம் விலையில் இது அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News