எலெக்ட்ரிக் கார் வெளியீட்டுக்கு தயாரான ஓலா
- ஒலா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீட்டுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
- இது அந்நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.
ஓலா நிறுவனம் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் செடான் மாடல் காரின் கான்செப்ட் படங்களை வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் ஓலா கஸ்டமர் டே நிகழ்வின் போது வெளியானது. இந்த நிகழ்வு பெங்களூரில் உள்ள ஆலையில் நடைபெற்றது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
டீசர் படங்களின் படி இந்த வாகனம் லோ-ஸ்லங் செடான் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இது ஸ்போர்ட் டிசைன், டபுள் பாரெல் ஹெட்லேம்ப்கள், அதனிடையே எல்.இ.டி. ஸ்ட்ரிப், பின்புறம் காரின் அகலம் முழுக்க எல்.இ.டி. ஸ்ட்ரிப் காணப்படுகிறது. தற்போது வெளியாக இருக்கும் புகைப்படங்களின் படி ஓலா நிறுவனம் தனது வாகனங்களில் டாப்-டவுன் வழிமுறையை பின்பற்றுவதாக தெரிகிறது.
ஏற்கனவே ஓலா நிறுவனம் கால் டாக்சி துறையில் இயங்கி வருவதை அடுத்து, புதிய எலெக்ட்ரிக் கார்கள் கால் டாக்சிக்களாகவும் பயன்படுத்தலாம். எனினும், இது பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கிய ஓலா நிறுவனம் இதே பானியை தனது எலெக்ட்ரிக் காரிலும் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.