வெளியீட்டுக்கு முன் டெஸ்டிங்கில் சிக்கிய மாருதி சுசுகி என்கேஜ்
- மாருதி சுசுகி எம்பிவி மாடல் என்கேஜ் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
- மாருதி சுசுகி நிறுவனம் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எம்பிவி கார் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஜூலை 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய எம்பிவி மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், டெஸ்டிங் செய்யப்படும் புதிய மாருதி சுசுகி எம்பிவி மாடல் என்கேஜ் பெயரில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஸ்பை படங்களின் படி புதிய எம்பிவி மாடலின் முன்புறம் முற்றிலும் வித்தியாசமாக காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் டுவின் பார் கிரில், ரிடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர், அளவில் பெரிய ஏர் இன்டேக், புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.
Photo Courtesy: MotorBeam
சர்வதேச அளவில் டொயோட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில், ரிபேட்ஜ் செய்யப்பட்ட ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் கர்நாடக மாநிலத்தின் பிடாடியில் உள்ள டொயோட்டா ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு இரு நிறுவனங்கள் கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியானது.
அதன்படி இருநிறுவனங்கள் கூட்டணி அமைத்ததில் இருந்து, சுசுகி பேட்ஜிங்கில் வெளியாகும் முதல் டொயோட்டா கார் இது ஆகும். இதுவரை மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ மாடல் கிளான்சா பெயரிலும், விட்டாரா பிரெஸ்ஸா மாடல் அர்பன் குரூயிசர் பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தன. இரு நிறுவனங்கள் இணைந்து மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்களை உருவாக்கின.
இதில் இரு மாடல்களையும் டொயோட்டா நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே ஹைகிராஸ் மாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக டாப் எண்ட் ZX மற்றும் ZX (o) வேரியண்ட்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.