வேற லெவல் லுக், சூப்பர் அம்சங்களுடன் அறிமுகமான புதிய கரிஸ்மா XMR 210!
- 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது.
- புதிய ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, என்ஜின் உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரபலமான கரிஸ்மா பிரான்டை மீண்டும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் கரிஸ்மா XMR 210 என்று அழைக்கப்படுகிறது.
புதிய கரிஸ்மா XMR 210 மாடலில் இளைஞர்களை கவரும் வகையிலான டிசைன், தனித்துவம் மிக்க கூர்மையான ஹெட்லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்-ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பாடிவொர்க்-இல் மெல்லிய சைடு ஃபேரிங்குகள் உள்ளன. இவை என்ஜின் மற்றும் சேசிஸ்-ஐ மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்துடன் 2023 ஹீரோ கரிஸ்மா XMR 210 முற்றிலும் அசத்தலான தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 210சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, நான்கு வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.15 ஹெச்.பி. பவர், 20.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப், அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
கரிஸ்மா XMR 210 மாடலில் முற்றிலும் புதிய சேசிஸ், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ஆறு வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோஷாக், பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 17-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.
இந்திய சந்தையில் ஹீரோ கரிஸ்மா XMR 210 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 73 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சுசுகி ஜிக்சர் SF 250, யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS200 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.