ஆட்டோ டிப்ஸ்

இந்திய டெஸ்டிங்கில் சிக்கிய எம்ஜி ஏர் EV

Update: 2022-11-16 11:31 GMT
  • எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் எம்ஜி காம்பேக்ட் EV அறிமுகம் செய்யப்படலாம்.

எம்ஜி நிறுவனம் ஏர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த நிலையில், புதிய எம்ஜி ஏர் EV மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களை மோட்டார்பீம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

புதிய ஏர் EV மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் வாகனமாக இருக்கும் என தெரிகிறது. தற்போது இதே மாடல் வுலிங் ஏர் EV பெயரில் இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாடலின் தோற்றம் அதன் இந்தோனேசிய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த சிறிய EV மாடலின் வீல்பேஸ் 2010mm ஆகும். இந்த காரின் நீளம் 2.9 மீட்டர்கள் ஆகும். இதில் 20 கிலோவாட் ஹவர் முதல் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம்.

எம்ஜி ஏர் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் முன்புற வீல் டிரைவ் கொண்ட மாடல் 40 ஹெச்பி எலெக்ட்ரிக் பவர்டிரெயின் மற்றும் ஒற்றை மோட்டார் வழங்கப்படுகிறது. இதன் பேட்டரி பேக் டாடா ஆட்டோகாம்ப் வழங்கும் என கூறப்படுகிறது.

இரண்டு கதவுகள் கொண்ட எம்ஜி ஏர் EV மாடலில் நான்கு பேர் அமரும் இருக்கை அமைப்பு வழங்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டில் டூயல் 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் உள்ளன. இவற்றில் ஒன்று இன்போடெயின்மெண்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் செயல்படுகின்றன.

இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஏர் EV மாடலின் விலை ரூ. 10 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. நகர பயன்பாட்டுக்காக புது கார் வாங்குவோரை குறிவைத்து இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வர்த்தக பிரிவிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Courtesy: MotorBeam

Tags:    

Similar News