ஆட்டோமொபைல்
கோப்புப்படம்

காரில் கியர் மாற்றும் போது இதை செய்யாதீங்க

Published On 2020-12-04 10:50 GMT   |   Update On 2020-12-04 10:50 GMT
கார் ஓட்டுவோர் கியர் மாற்றும் போது எதை செய்ய வேண்டாம் என்ற விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


கார் ஓட்டும் பெரும்பாலானவர்கள் கியர் மாற்றும்போது கிளட்ச் பெடலை அழுத்தி கியர் மாற்றுவார்கள். அவ்விதம் கியர் மாற்றிய பிறகு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுக்காமல் கிளட்ச் பெடலை காலை ஓய்வாக வைக்க உபயோகிக்கும் ஒரு இடம் போல அதன் மீது காலை வைத்தபடியே காரை ஓட்டுவார்கள்.

கிளட்ச் பெடலின் மீது காலை வைத்தபடியே ஓட்டுவதால், கிளட்ச் பெடல் எப்போதும் அழுந்திய நிலையிலேயே இருக்கும். இதனால் பிளை வீலுக்கும் பிரஷர் பிளேட்டிற்கும் இடையே உள்ள கிளட்ச் பிளேட் எப்போதுமே பிளை வீலில் இருந்து சற்று விலகியே சுற்றிக் கொண்டிருக்கும். இவ்விதம் கிளட்ச் பிளேட் விலகியே சுற்றுவதால் என்ஜினில் உருவாகும் சக்தியானது சரியாக கியர் பாக்சுக்கு கடத்தப்படுவது இல்லை.

என்ஜினின் முழு சக்தியும் சரியாக கடத்தப்படாததால் வாகனத்தின் வேகம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் பெட்ரோல், டீசல் வீணாகும். அத்துடன் கிளட்ச் பிளேட்டின் ஆயுள்காலம் குறையும். இதனால் குறைந்த கிலோ மீட்டர் ஓடிய நிலையில் கிளட்ச் பிளேட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். 

கியர் மாற்றும்போது கிளட்சை பயன்படுத்திவிட்டு பிறகு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுத்து விட வேண்டும். தேவையான போது மட்டுமே கிளட்ச் பெடலை அழுத்த வேண்டும்.

இப்போது வரும் கார்களில் கிளட்ச் பெடலுக்கு அருகிலேயே காலை வைத்துக்கொள்ள இட வசதி அளித்துள்ளனர். அதன் மீது காலை வைத்துக்கொண்டால் கிளட்ச் பகுதி நீண்ட காலம் உழைக்கும். என்ஜினின் முழு சக்தியும் காருக்குக் கிடைக்கும். எரிபொருளும் சிக்கனமாகும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
Tags:    

Similar News