மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 மார்கழி மாத ராசிபலன்

Published On 2025-12-14 08:34 IST   |   Update On 2025-12-14 08:35:00 IST

மிதுன ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. சுக்ரனோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும் வாய்ப்பு உண்டு. இம்மாதம் ஜென்ம குரு வரப்போவதால் திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் கூட ஒரு சிலருக்கு நீண்ட தூரங்களுக்கு மாறுதலாகி செல்லும் வாய்ப்பு உண்டு.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அங்ஙனம் ஜென்ம குருவாக வரும்பொழுது அவர் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். திடீர் இடமாற்றங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாமா?, வேண்டாமா? என்பது பற்றி சிந்திப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. தனித்து இயங்க முடியாமல் பிறரை சார்ந்திருப்பவர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் ஒரு சில பிரச்சினைகள் உருவாகும்.

'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, அதன் பார்வை பலனால் சில நன்மைகளும் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளால் உருவான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பெற்றோரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 'சொத்து விற்பனையால் வரும் லாபத்தைக் கொண்டு சுப காரியங்கள் நடத்தலாமா?' என்று யோசிப்பீர்கள்.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும்போது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதேநேரம் கணவன் - மனைவி இருவரும் வேறு வேறு இடத்தில் பணிபுரியக்கூடிய சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். தனுசு ராசியானது குருவிற்குரிய வீடு என்பதால், அதில் சஞ்சரிக்கும் பகை கிரகமான சுக்ரன் பலவித வழிகளிலும் திடீர் திடீரென மாற்றங்களைக் கொடுப்பார். மன வருத்தங்களும் அதிகரிக்கும்.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். ஒரு சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கைகூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் உயரும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 26, 27, 29, ஜனவரி: 5, 6, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

Similar News