மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 மாசி மாத ராசிபலன்

Published On 2025-02-13 08:31 IST   |   Update On 2025-02-13 08:32:00 IST

உதவும் குணத்தால் மற்றவர்கள் மனதில் இடம்பிடிக்கும் மிதுன ராசி நேயர்களே!

மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் மாதத் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்ரன் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். எனவே இம்மாதம் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். தடைபட்டு வந்த காரியங்கள் தானாக நடைபெறும். தொழில் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். பிள்ளை களால் வந்த பிரச்சினைகள் அகலும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை செலுத்துவது நல்லது. சர்ப்பக் கிரக வழிபாடு மகிழ்ச்சியை வழங்கும்.

சூரியன் - சனி சேர்க்கை

இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன்-சனி சேர்க்கை ஏற்பட்டுள்ளது. பாக்கிய ஸ்தானத்தில் முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டாலும், ஒரு சில வழிகளில் நன்மைகளும் ஏற்படும். பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். பலமுறை பாகப்பிரிவினைக்கு முயற்சி செய்தும், அது நடைபெறாமல் இருந்த நிலை இப்பொழுது மாறும்.

அரசல் புரசலாக இருந்த அண்ணன் - தம்பிகள் குணம் மாறி ஒத்துவருவர். நீண்ட நாட்களாக நாகரிகமான வாகனங்கள் வாங்கி, அதில் பயணிக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டு மனக்கவலையை அளிக்கலாம்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகி பலம்பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பலம்பெறும் இந்த நேரம் உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மனத்தெளிவோடு முடிவெடுப்பீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

'வாங்கிய இடத்தை விற்று விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது இடம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டு. 'வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்பை ஏற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

மீன - புதன் சஞ்சாரம்

மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் வலிமை இழக்கும் இந்த நேரம் அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு உண்டு. உறவினர் வழியில் மனக்கலக்கம் தரும் தகவல் வரலாம். குலதெய்வப் பிரார்த்தனையும், இஷ்ட தெய்வப் பிரார்த்தனையும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

நிதிப் பற்றாக்குறையால் நிம்மதி இழப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவதில் தடை ஏற்படும். பெற்றோரின் ஆதரவு குறையும். எந்தக் காரியமாக இருந்தாலும் போராட்டம் அதிகரிக்கும் நேரம் இது. குறிப்பாக யாருக்கும் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர் களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கை நழுவிச் செல்லலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதிகள் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

பிப்ரவரி: 16, 17, 28, மார்ச்: 2, 3, 4, 5, 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

Similar News