என் மலர்

  மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

  மிதுனம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  17.8.2022 முதல் 17.9.2022 வரை

  நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்க வேண்டும்என்று சொல்லும் மிதுன ராசி நேயர்களே!

  ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அஷ்டமத்துச் சனி வக்ரத்தில் இருப்பதால் பொருளாதாரம் திருப்தி தரும்.

  சிம்ம - சூரியன் சஞ்சாரம்

  உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு அதிபதி சூரியன். இவர் மாதம் முழுவதும் அங்கேயே சஞ்சரிக்கிறார். எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். தொழில், உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். தொழிலில் பணியாளர்கள் இணைந்து செயல்படுவர்.

  கன்னி - புதன் சஞ்சாரம்

  ஆவணி 8-ந் தேதி, கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசி அதிபதி உச்சம் பெறுவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

  வக்ர புதன் சஞ்சாரம்

  ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம்பெறுவது யோகம்தான். இக்காலத்தில் இடமாற்றம், வீடு மாற்றம் திருப்தி அளிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. இந்த காலகட்டத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

  சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

  ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது, பிள்ளைகள் வழியில் சுபவிரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த தடைகள் மாறும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

  குரு வக்ரமும், சனி வக்ரமும்

  மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு வக்ரம் பெறும்போது, நற்பலன்கள் கிடைக்கும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் என்பதால், எண்ணங்கள் நிறைவேறும். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம் பெறுகையில், ஒரு சில நன்மைகளைச் செய்தாலும், உறவினர் வழியில் பிரச்சினைகளை உருவாக்கும். ஆரோக்கியம் சீராக இருந்தாலும் நிம்மதி குறைவாக இருக்கும்.

  இந்த மாதம் வியாழக்கிழமை தோறும் குருபகவானை வழிபட்டால் நன்மைகள் அதிகம் பெறலாம்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 25, 26, 30, 31, செப்டம்பர்: 10, 11, 14, 15 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

  பெண்களுக்கான பலன்கள்

  இம்மாதம் அஷ்டமத்து சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் நிறைய கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் பிணக்கு ஏற்படாமல் இருக்க விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் வழியில் சுபகாரியங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். அரசுப் பணிக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.

  மிதுனம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  17-07-2022 முதல் 16-08-2022 வரை

  அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

  ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், தன ஸ்தானத்தில் சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

  ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். இந்த நேரம் வெற்றிகள் வீடு தேடி வரும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உறுதுணையாக இருப்பர். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒரு நல்ல காரியத்தை செய்து முடிப்பீர்கள். பொதுவாழ்வில் பொறுப்புகள் வந்துசேரும்.

  ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம- விரயாதிபதியான சுக்ரன் தன ஸ்தானத்திற்கு வரும்போது, விரயத்திற்கேற்ற வரவு வரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சி அனுகூலமாகும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு. புத்திர ஸ்தானாதிபதியாவும் சுக்ரன் விளங்குவதால் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும்.

  ஆடி 23-ந் தேதி, மீன ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவரான குரு பகவான் வக்ரம் பெறுவது ஓரளவு நன்மைதான். என்றாலும் எதிர்பாராத சில பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தொழிலில் மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுயதொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பர். 7-ம் இடத்திற்கு அதிபதியாகவும் குரு பகவான் விளங்குவதால் வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். வரன்கள் கை நழுவிச் செல்லலாம். குடும்ப ஒற்றுமை குறையலாம். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதால் அமைதி காண இயலும்.

  ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார் உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் விரயங்கள் கூடும். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் நிகழலாம். சொத்துக்களை விற்பனை செய்ய முன்வருவீர்கள். அடகு வைத்து மீட்ட பொருளை மீண்டும் அடகு வைக்க நேரிடும். 'நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றுமாக இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள்.

  இம்மாதம் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபாடு செய்யுங்கள்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 18, 21, 22, 29, 30, ஆகஸ்டு: 8, 12, 13, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

  பெண்களுக்கான பலன்கள்

  இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் செலவு அதிகரிக்கும். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் தேவைக்கேற்ற பணம் வந்துசேரும். குடும்பப் பிரச்சினைகளை வளராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

  மிதுனம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

  மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்று விரும்பும் மிதுன ராசி நேயர்களே!

  ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் விரய ஸ்தானத்தில் இருக்கிறார். சகாய ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடந்தாலும், விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய மாதம் இது.

  ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். விரயாதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த வேளையில், எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் குறுக்கீடு ஏற்படும். சஞ்சலம், சந்தேகம் காரணமாக, பல காரியங்களை செயல்படுத்த இயலாமல் போகலாம். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வீண்பழிகள் ஏற்படலாம்.

  ஆனி 11-ந் தேதி, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கே வருகிறார். இதன் விளைவாக நல்ல பலன்கள் ஏற்படும். குறிப்பாக தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்தி வீடு வந்துசேரும். புதன் சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உயர்அதிகாரிகளின் பழக்கத்தால் உத்தியோகத்தில் சில காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.

  ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். லாப ஸ்தானாதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்திற்கே வரும்பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பூமி வாங்கும் யோகம் வாய்க்கும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல்கள் கிடைக்கலாம். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

  ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதனான புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் இப்பொழுது துரிதமாகும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.

  ஆனி 29-ந் தேதி, மிதுன ராசியான உங்கள் ராசிக்கு பஞ்சம, விரயாதிபதியான சுக்ரன் வருகிறார். எனவே பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். பின்னணியாக இருக்கும் சில உறவினர்களுக்கும் நீங்கள் செலவு செய்ய நேரிடும். பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் வீடு, வாகனம் வாங்க சலுகைகள் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கைகூடும்.

  இம்மாதம் லட்சுமி சமேத விஷ்ணுவை வழிபட்டு வருவது நல்லது.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 20, 21, 30, ஜூலை 1, 6, 7, 16 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

  பெண்களுக்கான பலன்கள்

  இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படாது. கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். உடல்நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிதரும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

  மிதுனம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

  மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மிதுன ராசி நேயர்களே!

  வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அஷ்டமத்துச் சனி ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  மீன - செவ்வாய் சஞ்சாரம்

  வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியான செவ்வாய், 10-ல் சஞ்சரிக்கும் பொழுது தொழில் பிரச்சினை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நிம்மதி குறையும். வாய்தாக்கள், வழக்குகள் வந்த வண்ணம் இருக்கும். மனக்குழப்பம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை அதிகரிக்கும். சுயதொழில் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.

  சனி - செவ்வாய் பார்வைக் காலம்

  வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப்போகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அஷ்டமத்துச் சனி ஆதிக்கம் மற்றும் சனி -செவ்வாய் பார்வை ஏற்படுவதால் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படலாம். குருவோடு செவ்வாய் இணைந்து 'குருமங்கள யோக'த்தை உருவாக்குவதால் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும்.

  புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

  வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தனவரவு திருப்தி தரும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இந்த நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடிவரும்.

  மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

  இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். விரயாதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்போது, விரயத்திற்கேற்ற வருமானம் வந்துசேரும். இருப்பினும் வீண் விரயம் அதிகரிக்கும். பாகப்பிரிவினை சுமுகமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

  மகரச் சனியின் வக்ர காலம்

  உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். வருமானம் இருந்தாலும் செலவு இரட்டிப்பாகும். பெற்றோர் வழி உறவில் விரிசல் ஏற்படலாம். பூர்வீக சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி தடைப்படும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.

  இம்மாதம் புதன்கிழமை தோறும் விரதமிருந்து விஷ்ணு மற்றும் லட்சுமியை வழிபடுவது நல்லது.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 23, 24, 27, 28, ஜூன்: 3, 4, 8, 9, 10மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை

  பெண்களுக்கான பலன்கள்

  இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும், 10-ம் இடத்து குருவின் ஆதிக்கமும் உள்ளதால் பதவி மாற்றம் வரலாம். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். நீண்ட நாள் நோய் அகன்றாலும், உடல்நலனில் சில கோளாறுகள் வரத்தான் செய்யும். பொருளாதாரப் பற்றாக்குறை உண்டு. பணி புரியும் பெண்களுக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி செலவிடுவீர்கள். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகமும், ஒரு சிலருக்கு வாய்க்கும்.

  ×