என் மலர்tooltip icon

    மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

    மிதுனம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    ரகசியங்களைக் காப்பாற்றும் வல்லமை பெற்ற மிதுன ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் புதன், சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். இதன்மூலம் 'புத ஆதித்ய யோகம்' செயல்படுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர்.

    பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். சென்ற மாதத்தில் கைநழுவிச் சென்ற வாய்ப்புகள், இப்பொழுது கைகூடி வரும்.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். 6-க்கு அதிபதி நீச்சம்பெறுவது யோகம்தான். எதிரிகளின் தொல்லை குறையும். எடுத்த காரியங்களில் இருந்த தடை அகலும்.

    நல்ல நிறுவனங்களில் பணிபுரிய வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை, படிப்படியாக குறையும். உத்தியோகத்தில், சகப் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், சுக ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்குபவர் புதன். அவர் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு. தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

    உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி, தனித்து இயங்க முற்படுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். சனி பலம்பெறும் இந்த நேரம், யோகமான நேரம்தான். பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பலம்பெறுவதால், உங்கள் நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும்.

    பக்கபலமாக இருப்பவர்கள், உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த அரசல், புரசல்கள் மாறும்.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பயணங்கள் அதிகரிக்கும்.

    பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் ஆதாயம் தருவதாக இருக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கலைஞர்கள் முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைப்பர். மாணவ - மாணவியர் எதிர்பார்த்த இலக்கை அடைவார்கள். பெண்களுக்கு உறவினர்களால் நன்மை உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 18, 19, 24, 29, 30, நவம்பர்: 11, 12, 13, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    மிதுனம்

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    உலகம் போற்ற வாழ நினைக்கும் மிதுன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் செவ்வாய் உங்கள் ராசியிலேயே சஞ்சாிப்பதால், கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதம் இதுவாகும்.

    குடும்ப பிரச்சினைகள் அதிகரிக்கும். மனநிம்மதி குறையும். மகிழ்ச்சிக்குரிய தகவல் வருவது போல் இருந்து, கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லும். பணப்பற்றாக்குறை காரணமாகக் கடன் வாங்கும் சூழல் கூட உருவாகலாம்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனி, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவர், உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அஷ்டமாதிபதியான சனி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். ஒரு வழியில் பொருள் இழப்புகள் கூட வரலாம்.

    அதேநேரம் திடீர் வருமானம் வந்து மகிழ்ச்சியும் தரும். நீங்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும், திடீர் திடீரென சிக்கல் களையும், சிரமங் களையும் சந்திக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கலாம்.

    தொழில் வளர்ச்சியில் தொய்வு ஏற்படும். கூட்டாளிகளுடன் மனக்கசப்பு உண்டாகலாம். இந்த காலகட்டத்தில் சனி பகவான் வழிபாட்டை முறையாகச் செய்தால், இன்னல்கள் அகல வழிபிறக்கும்.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதி பதியானவர் புதன். அவர் உச்சம்பெறுவது நன்மைதான். சுக ஸ்தானாதிபதி புதன் உச்சம் பெறுவதால் சுகங்களும், சந்தோஷங்களும் வந்துசேரும். தாய்வழி ஆதரவு உண்டு.

    நிலபுலன்கள் சம்பந்தப்பட்ட வகையில் லாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். எதிர்பாராத தனலாபம் வந்து இதயத்தை மகிழ்விக்கும்.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன் சொந்த வீட்டில் இருக்கும்பொழுது, பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அண்ணன் - தம்பிகளுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். முக்கியப் புள்ளிகளை சந்தித்து முன்னேற்றம் அதிகரிக்க முடிவெடுப்பீர்கள்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே வரன்கள் வாசல் தேடி வரும். திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு, இதுநாள் வரை தள்ளிப்போன திருமணம் இப்போது கைகூடும்.

    ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கி பயணிக்கும் யோகம் உண்டு. உத்தியோகம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு தொலைதூரப் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போராட்டமான காலகட்டம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் வரலாம். கலைஞர்களின் திறமை பளிச்சிடும்.

    மாணவ - மாணவி களுக்கு படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். பெண் களுக்கு, உறவினர் பகை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கநிலை காணப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 19, 20, 26, 28, அக்டோபர்: 3, 4, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    பிறருக்காக போராடும் மகத்தான உள்ளம் பெற்ற மிதுன ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் ஸ்தானாதிபதி குருவும், லாபாதிபதி செவ்வாயும் இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள்.

    எனவே தொழில் மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம் போன்றவை நிகழ வாய்ப்புண்டு. சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். பொருளாதாரத்தில் வீழ்ச்சியும், எழுச்சியும் கலந்த நிலை இருக்கும்.

    சனி - சூரியன் பார்வை

    உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர், சனி. சகாய ஸ்தானத்திற்கு அதிபதியானவர், சூரியன். இந்த பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. முன்னோர்களின் சொத்துகளை பாகபிரிவினை செய்ததில் திருப்தி இருக்காது. இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி களில் தடை ஏற்படும். பெற்றோரின் அரவணைப்பு குறையலாம். 'மற்ற சகோதரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    நம்மைக் கண்டுகொள்வதில்லையே' என்று வருத்தப்படுவீர்கள். தொழில், உத்தியோகத்தில் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. இந்த காலகட்டத்தில் சூரியன் மற்றும் சனி பகவானுக்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யுங்கள்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். இவர் உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். சுக்ரன் நீச்சம் பெறுகையில் பூர்வ புண்ணியத்தின் பலனால், உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் தடைபடும். பிள்ளைகளால் பிரச்சினை அதிகரிக்கும். வீண் விவகாரங்கள் தலைதூக்கும். எந்த ஒரு முயற்சி செய்தாலும் அதில் இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும். கடமையை சரிவரச் செய்ய இயலாது. தாழ்வு மனப்பான்மையால் நொறுங்குவீர்கள்.

    உத்தியோகத்தில், மேல் அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல் போக்கு காணப்படும். சகப் பணி யாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. முன்கோபத்தின் காரணமாக உங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும். அதே நேரம் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஊர் மாற்றம் உங்கள் உள்ளத்தை மகிழ்விப்பதாக அமையும்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் உங்கள் ராசிக்கு வரும் இந்த நேரத்தில் உத்தியோக உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். தொழில் புரிபவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ள முன்வருவீர்கள்.

    சிம்ம - புதன்

    ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் புதன், உங்கள் ராசியிலேயே சஞ் சரிக்கும்பொழுது எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும் செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சிப் பாதையில் இருந்த குறுக்கீடு அகலும். திருமண வயதை எட்டிய பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் நேரம் இது. பெற்றோருக்கு மணிவிழா, கட்டிடத் திறப்புவிழா போன்றவற்றிலும் கவனம் செலுத்துவீர்கள். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவுபடுத்தவும், வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவும் எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப் படுத்தும் சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மாணவ-மாணவி களுக்கு ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். பெண்களில் சிலர், அசாத்திய துணிச்சலுடன் சில காரியங்களை செய்து பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 21, 22, 25, 26, 31, செப்டம்பர்: 1, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    மிதுனம்

    ஆடி மாத ராசிபலன்

    மற்றவர்களை ஈர்க்கும் விதத்தில் பேசும் மிதுன ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் விரயாதிபதி சுக்ரனோடும், சகாய ஸ்தானாதிபதி சூரியனோடும் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டே இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். குடும்ப முன்னேற்றம் கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர் களின் ஆதரவு உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு, எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்தில் இருந்தே குருவும், செவ்வாயும் இணைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்கள். இதன் விளைவாக இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் நீங்கள் செய்த முயற்சி கை கூடும். நிலபுலன்களை வாங்கவோ, விற்கவோ நினைப்பவர்களுக்கு, இது சிறப்பான காலகட்டமாக இருக்கும். உங்களோடு பகை பாராட்டிய சொந்தங்கள், இப்பொழுது உறவாட நெருங்கி வருவார்கள். 'குரு மங்கள யோகம்' செயல்படுவதால், இல்லத்தில் மங்கல ஓசை கேட்கக்கூடிய சூழல் உருவாகும். வீட்டில் திருமண வயதை எட்டிய பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு திருமணம் செய்ய எடுத்த முயற்சி கை கூடும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும். புகழ்பெற்ற ஆலயங்கள் சென்று வழிபட்டு வரும் வாய்ப்பு உருவாகும்.

    புதன்- வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். ஆடி 28-ந் தேதி வரை அவர் வக்ர இயக்கத்திலேயே இருக்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதி யான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி களிலும் இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்போடும் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். சகப் பணியாளர்களாலும் பிரச்சினையை சந்திக்க நேரிடும். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினைகள் உருவாகும். எதிலும் கவனம் தேவை.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் வேளையில், பிள்ளை களால் பெருமை வந்துசேரும். படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு, இப்பொழுது வேலை கிடைக்கும். 'பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும். உடன்பிறப்பு களின் இல்லங்களில் சுபகாரியங்கள் நடைபெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். கலைஞர்களுக்கு தன்னம்பிக்கை உண்டாகும். மாணவ - மாணவிகள், கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பெண்களுக்கு சுபகாரியங்கள் நடைபெறும் சூழல் உருவாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 23, 24, 28, 29, ஆகஸ்டு: 4, 5, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    ஆனி மாத ராசிபலன்

    எந்த நேரமும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்கும் மிதுன ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். மேலும் அவரோடு சூரியனும், சுக்ரனும் இணைந்திருப்பதால் 'புத ஆதித்ய யோக'மும், 'புத சுக்ர யோக'மும் ஏற்படுகிறது. எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. இல்லம் தேடி நல்ல தகவல்கள் வரலாம். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ரம் பெறும்பொழுது நன்மை, தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் அகலும். அதே நேரம் பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், பிள்ளைகளாலும், பெற்றோராலும் சில பிரச்சினைகள் வரக்கூடும். பாகப்பிரிவினைகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பூர்வீக சொத்துகளால், அண்ணன் - தம்பி களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

    கடக - புதன்

    ஆனி 12-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தனவரவு தாராளமாக வந்துசேரும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கூட்டு முயற்சிகளில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். விரயாதிபதி சுக்ரன் தன ஸ்தானத்திற்கு செல்லும்போது, விரயத்திற்கேற்ற வருமானம் உண்டு. எந்த வேலையையும் பணத்தை வைத்துக் கொண்டு செய்ய இயலாது. காரியத்தை தொடங்கிவிட்டால் பணப்புழக்கம் தானாகவே வந்துசேரும். இக்காலத்தில் பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள், திருமணம் போன்றவை நடைபெறலாம். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு அழைப்புகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக சுக்ரன் விளங்குவதால், பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படும். சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதாலும், ஆடை - ஆபரணப் பொருட்கள் வாங்குவதன் மூலமும் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, வரவைக் காட்டிலும் செலவு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்பட்டு மனக்குழப்பத்தை தரலாம். துணிந்து எந்த முடிவும் எடுக்க இயலாது. புதியவர்களை நம்பி செய்யும் முயற்சிகளில் விரயங்கள் அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, கடுமையான போட்டிகளுக்கு இடையில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது. கலைஞர் களுக்கு ஆதரவு பெருகும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்கள் சிக்க னத்தைக் கையாள்வது நல்லது. குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 15, 16, 27, 28, ஜூலை: 1, 2, 8, 9, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மிதுனம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன், சுக்ரனோடு இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக 'புத சுக்ர யோகம்' செயல் படுவதால் பொருளாதார நிலை உயரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். கடன் சுமை குறைய வழிபிறக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பஞ்சம - விரயாதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்திலேயே குருவோடு இணைந்து சஞ்சரிக்கப்போவதால் நல்ல சம்பவங்கள் பலவும் நடை பெறும். நாடு மாற்றமும், வீடு மாற்றமும் ஏற்படலாம். தேடிப் பார்த்தும் கிடைக்காமல் இருந்த ஒரு பொருள், இப்பொழுது தேடாமலேயே கைக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்பு மகிழ்ச்சி தரும். சுப விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். தாய் வழி ஆதரவு உண்டு. பெரிய அளவில் சொத்துக்கள் வாங்கி அதை விரிவாக்கம் செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீடு, வாகனம் வாங்க, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழிலில் எதிர்பார்த்ததை விடவும் அதிக லாபம் கிடைக்கும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்பனையாகி மகிழ்ச்சிப்படுத்தும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். பிரிந்து சென்ற சொந்தங்கள் இப்பொழுது மீண்டும் வந்து சேரும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் வரலாம்.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, உங்கள் ராசிக்கு புதன் வரு கிறார். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியிலேயே பலம் பெறுவது, யோகமான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்குரிய செய்திகள் ஒவ்வொன்றாக வந்துசேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தை உதறித் தள்ளிவிட்டு, நண்பர்களுடன் இணைந்து தொழில் செய்வது பற்றி யோசிப்பீர்கள். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய எண்ணம் கை கூடும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். விரயாதிபதியான சுக்ரன் உங்கள் ராசிக்கு வரும்போது, சுப விரயங்கள் அதிகரிக்கும். பெண் பிள்ளை களின் கல்யாணம் சம்பந்தமாக சீர் வரிசை பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பர். கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சி கை கூடும். புகழ்மிக்க ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு தேவையான முதலீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு தடைப்பட்ட ஒப்பந்தம் கிடைக்கப் பெறும். மாணவ - மாணவிகளுக்கு, ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் உள்ள பெண்கள் அனை வரும் சிக்கனத்தை கையாள வேண்டிய நேரம் இது. குடும்ப சுமை கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 14, 15, 19, 20, 30, 31, ஜூன்: 3, 4, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    பங்குனி மாத ராசிபலன்

    விடா முயற்சியே வெற்றி தரும் என்று கூறும் மிதுன ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், நீச்சம் பெறுவது யோகம்தான். எனவே தொட்டது துலங்கும். தொழில் வளம் சிறக்கும். வெற்றிக்குரிய செய்திகள் வீடு வந்துசேரும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் பலவும் வந்துசேரும். உடல்நலம் சீராகும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், இந்த மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவரோடு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய் இணைவதால், உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். சொத்துப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். சொந்தங்களாலும் அடிக்கடி பிரச்சினைகள் வந்து அலை மோதும். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி மன வருத்தத்தைத் தரும். சிக்கல்களில் இருந்து விடுபடவும், செல்வ வளம் குறையாமல் பார்த்துக்கொள்ளவும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடும், செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரக வழிபாடும் செய்வது நல்லது.

    புதன் வக்ரம்

    பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். ஏற்கனவே அங்கு நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், இப்பொழுது வக்ரமும் பெற்று வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். பிறருக்கு நீங்கள் நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். விற்பனை செய்த சொத்துக்களால் பிரச்சினைகள் உருவாகும். 4-ம் இடத்திற்கு அதிபதியாக புதன் விளங்குவதால், வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் எந்த ஒரு பலனும் கிடைக்காது. தாய்வழி ஆதரவு குறையும்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, மீன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது அவருக்கு உச்ச வீடாகும். மேலும் அவர் ஏற்கனவே மீனத்தில் இருக்கும் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தையும், 'நீச்சபங்க ராஜயோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே இக்காலம், உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல் நிறைய வந்துசேரும். சிக்கல்களும், சிரமங்களும் அகலும். திடீர் வரவு வந்து வளர்ச்சியை அதிகரிக்க வைக்கும். அசையாச் சொத்துகளில் முதலீடு செய்ய முன்வருவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பொன், பொருள் சேர்க்கை உண்டு. பொருளாதாரம் உச்சம் பெறும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் மனக் கலக்கம் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய பாதை புலப்படும். எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகள், தங்களின் பெற்றோர், ஆசியர்களின் ஆதரவோடு படிப்பில் வெற்றி காண்பர். கலைஞர்கள் போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் அடைவர். பெண்களுக்கு வீடு மாற்றம், இடமாற்றம் வரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 14, 20, 24, 25, 26, ஏப்ரல்: 6, 7, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    மிதுனம்

    மாசிமாத ராசிபலன்

    தன் மேற்பார்வையில் அனைத்தையும் செய்ய விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சகாய ஸ்தானாதிபதி சூரியனும், பாக்கியாதிபதி சனியும் இணைந்து சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் பலவும் இல்லம் தேடி வரப்போகிறது. நம்பிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். 'சொன்ன சொல்லை காப்பற்ற முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்கள், இனி கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள்.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். இதனால் பாக்கிய ஸ்தானம் வலுவடைகிறது. நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்யக்கூடிய வாய்ப்பு உருவாகும். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ஏற்ற இறக்கமான நிலை இனி மாறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். தொழில் போட்டியில் இருந்தவர்கள், விலகுவர். புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும்.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதியான சுக்ரன் 8-ம் இடத்திற்கு வரும்போது 'விபரீத ராஜயோகம்' செயல்படும். வீடு மாற்றம், இட மாற்றம், நாடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை திடீர் என ஏற்பட்டாலும், அவை நல்ல மாற்றங்களாகவே இருக்கும். நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடை அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஒரு சிலருக்கு அதிகாரம் மிகுந்த பதவி வந்துசேரும்.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறும் இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வருமானத்திலும் சிறு சிறு தடைகள் வந்துசேரும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். 'மருத்துவச் செலவு அதிகரிக்கின்றதே' என்ற மனக்கலக்கம் ஏற்படும். யோசித்து செயல்பட வேண்டிய நேரம் இது. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். அனுபவஸ்தர் களின் ஆலோசனை கைகொடுக்கும்.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 5-க்கு அதிபதி 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும், புகழும் உண்டு. இனத்தார் பகை மாறும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் நன்மதிப்பை பெறும் வாய்ப்பு உண்டு. உத்தியோகம், தொழிலில் உயர்நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, தன்னலமற்ற சேவைக்காக பாராட்டு குவியும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும். மாணவ, மாணவிகள் பாராட்டுக்களைப் பெறுவர். பெண்களுக்கு மன நிறைவான வாழ்க்கை அமையும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 15, 16, 22, 23, 28, 29,

    மார்ச்: 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மிதுனம்

    தை மாத ராசிபலன்

    யாரை எதற்குப் பயன்படுத்தலாம் என்பதை அறிந்துள்ள மிதுன ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாதத் தொடக்கத்தில் 9-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். ஒளிமயமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் தரும் இடம் 9-ம் இடமாகும். அங்கு சஞ்சரிக்கும் சனி பகவான் நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். குரு பலனும் நன்றாக இருக்கின்றது. தொழில் ஸ்தானாதிபதி குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரித்து பொருளாதாரத்தை சீர் செய்யும். தேங்கிய பணிகள் இனிமேல் துரிதமாக நடைபெறும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் குரு பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்றவர் குரு என்றாலும், அவர் பார்வைக்கு பலன் உண்டு. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சகோதர ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பிள்ளைகளால் பெருமை சேரும். பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும் பொழுது திருமண வயதை அடைந்த பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த கல்யாண முயற்சி இப்பொழுது கைகூடும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பழைய வாகனங்களின் பழுதுச்செலவை முன்னிட்டு, புதிய வாகனம் வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். விரயங்கள் அதிகரித்தாலும் நினைத்தது நிறைவேறும் நேரமிது.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அங்ஙனம் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன், மறைவிடத்திற்கு வரும் நேரம் நல்ல நேரம் தான். 'மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்' என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆளுமைத் திறனால் உங்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கப் போகின்றது.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அங்கு அவர் உச்சம் பெறுகின்றார். அஷ்டமத்தில் செவ்வாய் உச்சம்பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிகாலை முதல் இரவு வரை உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்து சேரும். `பணம் கையில் தங்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். கடன் பிரச்சினையின் காரணமாக சிலருக்கு சொத்துக்களை விற்கும் சூழல் உருவாகலாம். திடீர் மாற்றங்கள் அடிக்கடி நிகழும்.

    பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்துசேரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு வருமானம் திருப்தி தரும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை பலப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 15, 16, 19, 20, 25, 26, 27, பிப்ரவரி: 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    மிதுனம்

    மார்கழி மாத ராசிபலன்

    சவாலான வேலைகளை எளிதாக முடிக்கும் மிதுன ராசி நேயர்களே

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கிற பொழுது, உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இம் மாதம் 9-ம் இடத்திற்கு செல்ல இருக்கிறார். எனவே அஷ்டமத்துச் சனி விலகப்போகிறது. இனி அடுக்கடுக்காக நற்பலன்கள் உங்களுக்கு வரப்போகிறது. கொடுத்த பாக்கிகளும் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்களையும் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி உண்டு. இம்மாதம் யோக பலம் பெற்ற நாளில் சனி பகவானுக்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.

    கும்ப ராசியில் சனி

    மகர ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த நற்பலன்களை வழங்கப் போகிறது. மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா நடத்துவீர்கள். முன்கோபத்தின் காரணமாக கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது வந்துசேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    நல்ல சம்பவங்கள் நாளும் இல்லத்தில் நடைபெறும். அண்ணன், தம்பிகள், அக்கா, தங்கைகள், வாழ்க்கைத் துணை மற்றும் பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக அகலும். உங்களுக்கு அனுகூலம் தரும் சிறப்பு தலங்களை தேர்ந்தெடுத்து சனி பகவானை வழிபட்டு வந்தால் முன்னேற்றம் விரைவில் வந்து சேரும்.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது எதிர்பாராத நற்பலன்கள் நடைபெறும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வரும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும்.

    தனுசு-செவ்வாய்

    மார்கழி 11-ந் தேதி தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். உங்களை விரும்பாத சிலர் உங்களுக்கு போட்டியாக செயல்படுவர். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிலும் அகலக்கால் வைத்து அவதிப்படக் கூடாது. இக்காலத்தில் அங்காரக வழிபாடு அவசியம் தேவை.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும் 4-ம் இடம் எனப்படும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகத்தை உருவாக்கும் இந்த நேரம் நல்லநேரம் தான். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள். பதவி உயர்வு தானாக கிடைக்கும்.

    பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் வந்துசேரும். கலைஞர்களுக்கு நழுவி சென்ற ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் தேர்ச்சியும், பாராட்டும் உண்டு. பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 19, 20, 22, 23, 29, 30,

    ஜனவரி: 4, 5, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மிதுனம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் மிதுன ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்து சனி வக்ர நிவர்த்தியாகி இப்பொழுது பலம் பெற்று விட்டார். எனவே மனச்சோர்வு அதிகரிக்கும். எளிதில் முடிக்கக் கூடிய காரியங்கள் கூட மலைப்பாகத் தோன்றும். ஆரோக்கியத்தில் அதிகத் தொல்லைகளும், அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் அதிகப் பிரச்சினைகளும் உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குருவின் வக்ரத்தால் ஓரளவு நன்மை பெறலாம் என்றாலும், வழிபாடுகள் மூலமே நன்மையை வரவழைத்துக்கொள்ள இயலும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். கேந் திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் வக்ரம் பெறும் பொழுது நன்மைகளையே செய்யும். குறிப்பாக இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.

    கல்யாண முயற்சிகள் கை கூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் செல்வது பற்றிச் சிந்திப்பர். பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும். வாங்கிய கடனைக் கொடுத்தும், கொடுத்த கடனை வசூலித்தும் மகிழும் நேரமிது.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாக விளங்கும் சுக்ரன், மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எனவே பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். வெற்றி வாய்ப்புகளைச் சந்திப்பீர்கள். விரும்பிய வண்ணம் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு உத்தியோகத்தில் திருப்தியாக இருக்கும்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியான புதன் சப்தம ஸ்தானத்திற்கு கார்த்திகை 14-ம் தேதி வருகின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கின்றார். எனவே மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். தொழிலில் மித மிஞ்சிய லாபம் வந்து சேரும்.

    உறவினர்களும், நண்பர்களும் போட்டி போட்டுக்கொண்டு உதவுவர். வரன்கள் வாசல் தேடி வரும். வருங்கால நலன்கருதி சேமிக்க முற்படுவீர்கள்.

    மிதுனம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற வழிசொல்லும் மிதுன ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கின்றார். அவர் வக்ர நிவர்த்தியான பின்னால் அஷ்டம ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே எதையும் திட்டமிட்டுச்செய்ய இயலாது. திடீர் விரயங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத் தொல்லையாலும் அவதி, அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியிலும் குழப்பம் உருவாகும். சேமிப்புகள் கரைந்து மனதை வாட வைக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். அஷ்டமத்துச் சனி வக்ர நிவர்த்தியாகி வலுப்பெறுவதால் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். 'அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி' என்பது பழமொழி. எனவே எந்த வழிகளிலும் சிக்கல் களும், சிரமங்களும் வரலாம். முன்னெச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமை குறையும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பது அரிது. கூட்டாளிகள் உங்களை விட்டு விலகலாம். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினை, கொடுக்கல்-வாங்கல்களிலும் பிரச்சினை என்ற நிலை உருவாகும். உற்றார், உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஊா் மாற்றம், இட மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். யோக பலம் பெற்ற நாளில் சனிக்குரிய வழிபாடுகளை மேற்கொள்வது உகந்தது.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றிருக்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் அடைவது நன்மை தான். கல்யாண முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ெவளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வரலாம்.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதி சுக்ரன் நீச்சம் பெறுவது யோகம் தான். ஆனால் 5-ம் இடத்திற்கும் அதிபதியாக சுக்ரன் விளங்குவதால் பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகலாம். பூர்வீக சொத்துத் தகராறுகள் வரலாம். வம்பு வழக்குகள் வீடு தேடிவரும். தெம்பும், உற்சாகமும் குறையும். திடீர், திடீர் என வரும் விரயங்கள் மனதை வாடவைக்கும். செய்யும் முயற்சிகளில் பலன் கிடைப்பது அரிது.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். இக்காலம் உங்களுக்கு ஓர் இனிய காலமாகும். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். உங்கள் திறமைக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். பாராட்டும், புகழும் கூடும். பல நாட்களாக நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இடையூறு சக்திகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடுகளும், நெருக்கடி நிலையும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் சக கலைஞர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரமிது. மாணவ-மாணவியர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். விரயங்கள் உண்டு. விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமே ஒற்றுமை பலப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 25, 26, 29, 30, நவம்பர் 5, 6, 10, 11

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: பச்சை.

    ×