மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆடி மாத ராசிபலன்

Published On 2025-07-17 07:35 IST   |   Update On 2025-07-17 07:36:00 IST

மிதுன ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். ஆனால் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். 'நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உங்கள் ராசியில் குருவின் ஆதிக்கமும் இருப்பதால், தொழில் வளம் சிறப்பாக இருக்கும். அதேநேரம் மன பயமும், நிம்மதி குறைவும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும். தொடங்கிய காரியத்தை முடிக்க முடியாமல் போகலாம்.

மிதுன - சுக்ரன்

ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். விரயாதிபதியான சுக்ரன் உங்கள் ராசிக்கு வரும் பொழுது விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். 'கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படுகிறதே' என்று கவலைப்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களை அதிகச் செலவு செய்தே முடிக்க நேரிடும். பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்து அலைமோதும். மனக்குழப்பம் அகலவும், புதிய முயற்சிகளில் வெற்றி பெறவும், அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

கன்னி - செவ்வாய்

ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும்போது, பொருளாதார நிலை மகிழ்ச்சி தரும். என்றாலும் மேலதிகாரிகள் உங்கள் திறமைக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கமாட்டார்கள். கடன் சுமை அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்கும் சூழல் ஏற்படும். சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்களின் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரம் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. மருத்துவச் செலவுகள் உண்டு.

கடக - புதன்

ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தனவரவு தாராளமாக வந்துசேரும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வழிபிறக்கும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வரலாம். வீடு கட்டும் முயற்சி பலன்தரும். பெற்றோரின் ஆதரவு பெரிதும் உதவிகரமாக இருக்கும். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உடல்நலக் குறைபாடு அகலும். வெளிநாடு செல்லும் முயற்சிக்கு அஸ்திவாரம் அமைத்துக்கொள்வீர்கள். வருமான உயர்விற்கு நண்பர்கள் மூலம் வழிபிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். பங்குச்சந்தை மூலம் பலன்பெறும் நேரம் இது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர்.

பொதுவாழ்வில் உள்ளவர்கள் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகளால் பிரச்சினைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் மகிழ்ச்சி நிலவும். கலைஞர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் வெற்றி கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும். பணியாளர்களின் பிரச்சினையை சமாளிக்க நேரிடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 18, 19, 29, 30, ஆகஸ்டு: 1, 11, 15, 16.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

Similar News