மேஷ ராசி நேயர்களே!
புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். எனவே தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தேக நலன் சீராகும். சொத்துக்களால் யோகமும், சொந்தங்களால் நன்மையும் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் சில காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். உடன்பிறப்புகளின் திருமண முயற்சி கைகூடும்.
துலாம் - புதன்
புரட்டாசி 13-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் சென்ற மாதம் 6-ம் இடத்தில் உச்சம் பெற்று இருந்தபோது, கடன் சுமை அதிகரித்து, கவலைகள் மேலோங்கி இருக்கலாம். அந்த நிலை இப்பொழுது மாறும். கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய செய்தி வந்துசேரும். சப்தம ஸ்தானத்திற்கு வரும் புதனால் வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு, இப்பொழுது வேலை கிடைத்து உதிரி வருமானம் கிடைக்கப்பெறும். வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது.
கடக - குரு
புரட்டாசி 22-ந் தேதி, கடக ராசிக்கு குரு செல்கிறார். அதிசார கதியில் அங்கு செல்லும் குரு பகவான் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு உச்சம் பெறும் நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். குரு பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. இந்த இடங்களை உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை. குருவின் பார்வை பலத்தால் தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பெற்றோரின் ஒத்துழைப்போடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உற்றார் - உறவினர்களின் ஆதரவு திருப்தி தரும். ஊர் மாற்றம், இடமாற்றம் நன்மை தரும் விதம் அமையும். தொழிலில் பணியாளர்களின் மாற்றங்களும், புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் காட்டும் ஆர்வமும் பலன்தரும்.
சனி வக்ரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் மற்றும் லாபாதிபதியாக விளங்கும் சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. மாதத் தொடக்கத்தில் குருவின் பார்வை சனி மீது பதிகிறது. எனவே அதன் கடுமை கொஞ்சம் குறையும். மாதக் கடைசியில் குருப்பெயர்ச்சிக்குப் பின்னால் சனி வலிமையடைவதால் தொழில் வியாபாரத்தில் மிகமிக கவனம் தேவை. நெருக்கடி நிலை அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிக்க இயலாது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் நிகழும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதக் கடைசியில் பண நெருக்கடி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாறுதலான இடத்தால் மனதிற்கு திருப்தி இருக்காது. கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் குறுக்கீடுகள் உண்டு. மாணவ - மாணவியர்களுக்கு கல்வியில் அக்கறை தேவை. பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்க்கை சக்கரம் சுழலும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
செப்டம்பர்: 18, 19, 29, 30, அக்டோபர்: 5, 6, 10, 11, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர்பச்சை.