நல்ல சிந்தனையும் தியாக உணர்வும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருந்தாலும் மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். ராசிநாதன் பலம்பெறும் இந்த மாதம் யோகமான மாதம்தான்.
தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தனாதிபதியின் பரிவர்த்தனையால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தெய்வீகப் பயணங்கள் அதிகரிக்கும்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியனும், சனியும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். பஞ்சமாதிபதி சூரியனும், லாபாதிபதி சூரியனும் லாப ஸ்தானத்தில் சேர்க்கை பெற்றிருப்பது நன்மைதான். பகைக் கிரகமாக இருந்தாலும் ஒரு சில வழிகளில் நல்ல மாற்றங்களைக் கொடுக்கும். குறிப்பாக படித்து முடித்த பிள்ளைகளின் உத்தியோகத்திற்காக ஏற்பாடு செய்திருந்தால் அது கிடைக்கும்.
அதன் மூலம் உதிரி வருமானங்கள் வந்துசேரும். வருங்காலம் நலமடைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இருந்தாலும் இடையிடையே சிறுசிறு தடங்கல்கள் வரலாம். இருப்பினும் கடைசி நேரத்தில் காரியங்கள் கை கூடிவரும். வெளிநாட்டு அழைப்புகளைப் பற்றி சிந்திப்பீர்கள்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். ராசிநாதன் பலம்பெற்று சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்பொழுது, எல்லா வழி களிலும் நன்மை கிடைக்கும். எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
தொழிலில் இருந்து வரும் பணியாளர் தொல்லை அகலும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். உடன்பிறப்புகளின் வழியே சுபச்செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வழக்குகள் சாதகமாகும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை, 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் நீச்சம் பெறும் இந்த நேரம் நல்ல நேரம்தான். நினைத்தது நிறைவேறும். நேசக்கரம் நீட்ட உறவினர்கள் முன்வருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். இதுவரை உங்களை விட்டு விலகி இருந்த உறவினர்களும், உடன்பிறப்புகளும் இப்பொழுது மீண்டும் வந்திணைவர்.
வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சிகள் வெற்றிகரமாக அமையும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அறிமுகம் தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் முக்கியப் பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவர்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாகலாம். கலைஞர்களுக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 23, 24, 28, மார்ச்: 1, 6, 7, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.