மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மேஷ ராசி நேயர்களே!
விசுவாவசு வருட புத்தாண்டில் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். குரு பகவான், தன ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நினைத்ததை சாதித்துக் காட்டும் வல்லமை பெற்ற உங்களுக்கு, தொழில் அபிவிருத்தி, வியாபார முன்னேற்றம், உத்தியோக உயர்வு, குடும்பத்தில் சுப நிகழ்வு, பிள்ளைகளால் மேன்மை ஆகியவை நடைபெறும் நேரம் இது. ஆயினும் ராசிநாதன் செவ்வாய் நீச்சம் பெற்று வலிமை இழந்திருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
குரு - சுக்ர பரிவர்த்தனை
சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. தன ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்தில் இந்தப் பரிவர்த்தனை நிகழ்வதால், குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். வருமானம் திருப்தி தரும். அதே நேரம் விரயங்களும் அதிகரிக்கும். சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கும் யோகம் உண்டு.
கும்ப -ராகு, சிம்ம -கேது
சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு உற்சாகம் தரும். புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும். நீண்ட நாட்களாக பேசிய பிறகு விட்டுப்போன திருமணம், இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியைத் தரலாம். யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரம் செய்வதன் மூலம் மேலும் நன்மைகளைப் பெறலாம்.
மேஷ - புதன் சஞ்சாரம்
சித்திரை 17-ந் தேதி மேஷ ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத - ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இலாகா மாற்றம் கிடைக்கலாம். பழைய கடன்களை பைசல் செய்து மகிழ்வீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர்.
மிதுன - குரு சஞ்சாரம்
சித்திரை 28-ந் தேதி மிதுன ராசிக்கு குரு வருகிறார். இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக அவரது பார்வை பதியும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே திருமணத் தடை அகலும். மங்கல நிகழ்ச்சி இக்காலத்தில் நடை பெறும். பெற்றோர் வழி ஆதரவு உண்டு. பூர்வீக சொத்துக்களால் ஆதாயமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பும், பொருளாதாரத்தில் நிறைவும் ஏற்படும். இக்காலத்தில் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவைப் பலப்படுத்த குருவிற்கு பரிகாரம் செய்வது நல்லது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர் களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ- மாணவியர்களுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைய எடுத்த முயற்சி கைகூடும். பெண்களுக்கு கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு உண்டு. இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஏப்ரல்: 18, 19, 20, 21, 25, 30, மே: 1, 4, 5.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்